கண்டதற்கும் கேட்டதற்கும் சான்று பகர்பவர்களாக வாழ முயல்வோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருழுக்கு யோவானின் திருவிழாவை சிறப்பிக்கும் இந்நாளில் அவரது வாழ்வும் பணியும், உலகெங்கும் வாழும் நற்செய்தி அறிவிப்பாளர்களின் பணியினை சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது என்றும், வாழ்வளிக்கும் இறைவனிடம் நாம் கண்டவற்றிற்கும், சந்தித்தவற்றிற்கும் சான்று பகரக்கூடியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 29, வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் தூய அந்திரேயா நற்செய்தி அறிவிப்புப்பள்ளிகளின் உறுப்பினர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இன்றைய நாளில் திருஅவை சிறப்பிக்கும் புனித திருமுழுக்கு யோவான் தலை துண்டிக்கப்பட்ட திருநாளை நினைவுகூர்ந்து தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
“தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோ:1:3) என்ற திருத்தூதர் யோவானின் வார்த்தைகளே, திருஅவை மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் பணியாக இருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும், பெற்ற அழைப்பை வாழ்வாக்கும் பொருட்டும், நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக மாற, நாம் பெற்றதை நாம் மற்றவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், திருமுழுக்கு யோவானைப்போல இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடர்களாக இருந்து, அவரை வார்த்தைகளிலும் செயல்களிலும் வெளிப்படுத்திய புனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
யோவான் நற்செய்தியின் முன்னுரையில் "வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் என்று கூறும் திருத்தூதர் யோவான் அந்த வார்த்தைக்கு சான்று பகர்பவராக திருமுழுக்கு யோவான் இருக்கின்றார் என்பதையும் எடுத்துரைக்கின்றார் என மொழிந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்