MAP

நட்பு என்பது அமைதிக்கான பாதை

நேர்மையான உறவுகளும் நிலையான பிணைப்புகளும் மட்டுமே நல்ல வாழ்க்கைக் கதைகளை வளர்க்கின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்துவில் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள். மற்றவர்களில் இயேசுவை எப்படிக் காண்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நட்பு உண்மையிலேயே உலகை மாற்றும். நட்பு என்பது அமைதிக்கான பாதை என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்ட் 2, சனிக்கிழமை இரவு உரோமில் உள்ள Tor Vergata, என்னும் பகுதியில் நடைபெற்ற இளைஞர்களுக்கான யூபிலி முன் தயாரிப்பு செப வழிபாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளைஞர்கள் மூவர் தொடுத்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கேள்வி 1: நட்புறவு

சமூக ஊடகங்கள், தொழில்நுட்பக் கலாச்சாரங்கள் போன்றவற்றால் மாறி வரும் உலகில் நாம், உண்மையான நட்புறவையும் நம்மை உண்மையான எதிர்நோக்கிற்கு வழிநடத்தும் நேர்மையான அன்புறவையும் எப்படிக் கண்டடைவது? என்று மெக்சிகோவைச் சார்ந்த 23 வயது Dulce María, என்பவர் கேட்ட கேள்விக்குக் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார் திருத்தந்தை.

அன்புள்ள இளைஞர்களே, உலகில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் ஒருவரின் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கி மனித உறவுகள், மற்றவர்களுடனான நமது உறவுகள், நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை. நமது வாழ்க்கை ஒரு பிணைப்புடன் தொடங்குகிறது, மேலும் பிணைப்புகள் மூலம்தான் நாம் வளர்கிறோம். இந்த செயல்பாட்டில், கலாச்சாரம் என்பது ஒரு முக்கியமான  அடிப்படைப் பாத்திரத்தை வகிக்கிறது. இது நம்மைப் புரிந்துகொண்டு உலகை விளக்கும் குறியீடாகும். ஒரு அகராதியைப் போலவே, ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நாம் அங்கீகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டிய உன்னதமான மற்றும் மோசமான சொற்கள், மதிப்புகள் மற்றும் பிழைகள் உள்ளன.

உண்மையை ஆர்வத்துடன் தேடுவதன் வழியாக நாம் ஒரு கலாச்சாரத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அதை நம் வாழ்க்கைத் தேர்வுகள் வழியாக மாற்றுகிறோம். உண்மையில், உண்மை என்பது வார்த்தைகளை விடயங்களுடனும், பெயர்களை முகங்களுடனும் இணைக்கும் ஒரு பிணைப்பு. மறுபுறம், பொய்கள் இந்த அம்சங்களைப் பிரிக்கின்றன, குழப்பத்தையும் தவறான புரிதலையும் உருவாக்குகின்றன.

தற்போது, நமது வாழ்க்கையை வகைப்படுத்தும் பல கலாச்சார தொடர்புகளில், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் "மக்களிடையே உரையாடல், சந்திப்பு மற்றும் பரிமாற்றம், தகவல் மற்றும் அறிவை அணுகுவதற்கான ஒரு அசாதாரண வாய்ப்பாக" மாறியுள்ளன. இருப்பினும், இந்த கருவிகள் வணிக தர்க்கம் மற்றும் நமது உறவுகளை ஆயிரம் துண்டுகளாக உடைக்கும் ஆர்வங்களால் ஆதிக்கம் செலுத்தும்போது தெளிவற்றதாகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "சமூகத்தொடர்பு, விளம்பரம் மற்றும் சமூக ஊடகங்களின் வழிமுறைகள் நம்மை உணர்ச்சியற்றவர்களாகவும், நுகர்வு சார்ந்தவர்களாகவும் மாற்ற சில சமயங்களில் பயன்படுத்தலாம்" என்று கிறிஸ்து வாழ்கின்றார் என்ற திருமடலில் (105) நினைவு கூர்ந்தார்.

இந்நிலையால் நாளடைவில் நமது உறவுகள் குழப்பமடைகின்றன, பதட்டமாகின்றன அல்லது நிலையற்றவையாகின்றன. கருவி மனிதனை ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதன் ஒரு கருவியாகவே மாறுகிறான்.

நேர்மையான உறவுகளும் நிலையான பிணைப்புகளும் மட்டுமே நல்ல வாழ்க்கைக் கதைகளை வளர்க்கின்றன. ஒவ்வொரு நபரும் இயற்கையாகவே நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள், நுரையீரல் காற்றை நோக்கிச் செல்வது போல, ஆனால் அக்காற்று எப்படிச்செல்கின்றது என்பதைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ! அதுபோல உண்மையான நட்பைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, புனித அகஸ்டின் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறியாமலேயே, ஏமாற்றாத உண்மையை, மறைந்து போகாத அழகைத் தேடினார். அதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார்? ஏற்கனவே தன்னைத் தேடிக்கொண்டிருந்தவரைக் கண்டுபிடித்ததன் வழியாக, இயேசு கிறிஸ்துவைக் கண்டுபிடித்ததன் வழியாக, நம்பிக்கையைத் தரும் அன்பை, உண்மையான நட்பை கண்டுபிடித்தார்.

"கிறிஸ்துவைத் தவிர வேறு எந்த நட்பும் உண்மையாக இருக்காது", "கிறிஸ்துவில் இல்லையென்றால் உண்மையான நட்பு இல்லை." மேலும் உண்மையான நட்பு எப்போதும் உண்மை, அன்பு மற்றும் மரியாதையுடன் இயேசு கிறிஸ்துவில் உள்ளது. "அவரில் மட்டுமே அது மகிழ்ச்சியாகவும் நித்தியமாகவும் இருக்க முடியும்" என்று புனித அகஸ்டின் நமக்குச் சொல்கிறார்.

நம்பிக்கையின் அடித்தளமான கிறிஸ்துவுடனான நட்பு என்பது, எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நமக்குக் கிடைக்கும் பல உதவிகளில் ஒன்றல்ல; அது நமக்கு வழிகாட்டும் நட்சத்திரம். "நம்பிக்கை இல்லாமல், பாதுகாக்க ஒரு பாரம்பரியம் இல்லாமல், உண்மைக்காக போராடாமல் வாழ்வது என்பது வாழ்வது அல்ல, மாறாக வெறுமனே இருப்பதுதான்". நமது நட்புகள் இயேசுவுடனான இந்த தீவிர பிணைப்பை பிரதிபலிக்கும் போது, அவை நிச்சயமாக நேர்மையானவை, தாராளமானவை மற்றும் உண்மையாக மாறும்.

ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள், கிறிஸ்துவில் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள். மற்றவர்களில் இயேசுவை எப்படிப் பார்ப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நட்பு உண்மையிலேயே உலகை மாற்றும். நட்பு என்பது அமைதிக்கான பாதை. நட்பு என்பது அமைதிக்கான பாதை.

கேள்வி 2 – தேர்வு செய்ய துணிவு

தேர்வு செய்வதற்கான துணிவு எங்கிருந்து கிடைக்கும்? தீவிரமான மற்றும் அர்த்தமுள்ள தேர்வுகளைத் தேர்ந்தெடுத்து, துணிவுடன் இருந்து உண்மையான விடுதலையை எவ்வாறு வாழ முடியும்? என்ற இத்தாலிசயிசார்ந்த 19 வயது காயா என்பவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

தேர்ந்தெடுப்பது என்பது ஓர் அடிப்படை மனித செயல். கவனமாகப் பார்க்கும்போது, அது எதையாவது தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, ஒருவரைத் தேர்ந்தெடுப்பதும் கூடதான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நாம் தேர்ந்தெடுக்கும்போது, வலுவான அர்த்தத்தில், நாம் யாராக மாற விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கிறோம். உண்மையில், சிறந்த தேர்வு என்பது நீங்கள் எப்படிப்பட்ட ஆணாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற நம் வாழ்க்கைக்கான முடிவு.

வாழ்க்கையின் சோதனைகள் வழியாக நாம் தேர்வு செய்யக் கற்றுக்கொள்கிறோம், முதலில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வதன் வழியாக இந்த நினைவை ஆராய்ந்து வளர்க்க வேண்டும். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல், அதை நாம் இலவசமாகப் பெற்றோம்! நம் தோற்றத்தில் நம் முடிவு இல்லை, ஆனால் நம்மை விரும்பிய ஓர் அன்பு இருந்தது. இந்த அருளை அடையாளம் கண்டு, புதுப்பிக்க உதவுபவர்கள் தங்களை உண்மையான நண்பர்கள் என்று நிரூபிக்கிறார்கள்.

"தேர்வு செய்வது என்பது வேறு எதையாவது விட்டுக்கொடுப்பதையும் குறிக்கிறது, இது சில சமயங்களில் அது நம்மைத் தடுக்கிறது." சுதந்திரமாக இருக்க, நாம் ஒரு நிலையான அடித்தளத்திலிருந்து, நாம் முன்னேறிச் செல்ல நமக்கு உதவும் படிகளை ஆதரிக்கும் பாறையிலிருந்து தொடங்க வேண்டும். இந்தப் பாறை கடவுளின் அன்பு. எனவே, அவருக்கு முன், தேர்வு என்பது எந்த நன்மையையும் எடுத்துக்கொள்ளாத ஒரு தீர்ப்பாக மாறுகிறது,  எப்போதும் சிறந்ததை நோக்கி வழிநடத்துகிறது.

தேர்வு செய்வதற்கான துணிவு கடவுள் கிறிஸ்து நமக்குக் காட்டும் அன்பிலிருந்து வருகிறது. அவர் நம்மை முழுவதுமாக அன்பு செய்தார். உலகைக் காப்பாற்றினார், இதன் வழியாக வாழ்க்கையின் கொடை தன்னை நிறைவேற்றுவதற்கான வழி என்பதைக் காட்டினார். இந்தக் காரணத்திற்காக, இயேசுவுடனான சந்திப்பு நம் இதயத்தின் ஆழமான எதிர்பார்ப்புகளுக்கு ஒத்திருக்கிறது, ஏனென்றால் அவரே மனிதனைப் படைத்த கடவுளின் அன்பாகிய இயேசு.

திருமணம், குருத்துவம் மற்றும் துறவறம் ஆகியவை இக்கொடையை வெளிப்படுத்துகின்றன, விடுதலை அளிக்கின்றன, இது நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சியடையச் செய்கிறது. நாம் நம்மைக் கொடுக்கக் கற்றுக்கொள்ளும்போது, மற்றவர்களுக்காக நம் வாழ்க்கையைக் கொடுக்கும்போது, அங்கே நாம் மகிழ்ச்சியைக் காண்கிறோம்.

தேர்வுகள் நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகின்றன, நம்மைப் பரிபூரண அன்பின் உருவமாக மாற்றுகின்றன, நம்மை உருவாக்கி, மரணத்திலிருந்து கூட அனைத்து தீமைகளிலிருந்தும் நம்மை மீட்கின்றன. கடினமான தேர்வுகளைச் செய்ய துணிவைக் கண்டறிந்து, “ஆண்டவரே, நீரே என் உயிர், என் வாழ்வு என்று இயேசுவிடம் சொல்வோம்.

கேள்வி 3 : நன்மைக்கான மறு அழைப்பு

உயிர்த்தெழுந்த இறைவனை நம் வாழ்வில் எவ்வாறு உண்மையாகச் சந்திக்க முடியும், சோதனைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும் அவரது இருப்பை எவ்வாறு உறுதியாக நம்ப முடியும்? என்ற அமெரிக்காவைச் சார்ந்த 20 வயது வில் என்பவர் கேட்டக் கேள்விக்கு பதில் அளிக்கைகையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

விவிலியத்தில் "இதயம்" என்ற சொல் பொதுவாக ஒரு நபரின் உள்ளார்ந்த உள்ளத்தைக் குறிக்கிறது, அதில் நமது மனசாட்சியும் அடங்கும். எனவே, நல்லது என்ன என்பதைப் பற்றிய நமது புரிதல், நமது மனசாட்சி எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது; நம்மிடம் இரக்கம் காட்டியவர்கள், அன்புடன் நமக்குச் செவிசாய்த்தவர்கள், நமக்கு உதவியவர்கள். அந்த மக்கள் நாம் நன்மையில் வளர்க்கவும், நம் அன்றாடத் தேர்வுகளில் நன்மையைத் தேடவும், மனசாட்சியை உருவாக்கவும் உதவுகின்றார்கள்.

நம் மனசாட்சியை உருவாக்குவதில் எப்போதும் நம்முடன் இருக்கும் நண்பர் இயேசு. நீங்கள் உண்மையிலேயே உயிர்த்தெழுந்த இறைவனைச் சந்திக்க விரும்பினால், மீட்பின் நற்செய்தியான அவரது வார்த்தையைக் கேட்க வேண்டும். நமது வாழ்க்கை முறையைப் பற்றி சிந்தித்து, மிகவும் மனிதாபிமான உலகைக் கட்டியெழுப்ப நீதியைத் தேட வேண்டும். ஏழைகளுக்குப் பணியாற்ற வேண்டும். நம் அண்டை வீட்டாரிடமிருந்து நாம் எப்போதும் பெற விரும்பும் நன்மைக்கு சான்றாக இருக்க வேண்டும். 

இளைஞர்களே, நற்கருணையில் இயேசு கிறிஸ்துவுடன் ஒன்றித்து இருங்கள். முடிவில்லாத இறைவனின் அடைப்படையான அருளடையாளச் சடங்கில் கிறிஸ்துவை வணங்குங்கள். எப்போதும் நம்முடன் நடந்து செல்லும் நல்ல ஆசிரியரான இயேசுவின் முன்மாதிரியின்படி படிக்கவும், பணியாற்றவும் அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

நாம் ஒவ்வொரு அடியிலும் நன்மையைத் தேடும்போது, அவரிடம் கேட்போம்: ஆண்டவரே எங்களுடன் தங்கிஇருங்கள், ஏனென்றால் நீர் இல்லாமல் நாங்கள் விரும்பும் நன்மையைச் செய்ய எங்களால் முடியாது. நீர் எங்கள் நன்மையை விரும்புபவர். உண்மையில் ஆண்டவரே, நீர் எங்கள் நன்மை என்று கூறுவோம்.

நீதி மற்றும் அமைதியின் சாட்சிகளாக இருக்கும் நற்செய்தியின் மறைப்பணியாளர்கள் உலகிற்குத் தேவை! நம்பிக்கையின் சாட்சிகளாக இருக்கும் ஆண்களும் பெண்களும் எதிர்காலத்திற்குத் தேவை! அன்புள்ள இளைஞர்களே, உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கும் பணி இது தான்!

இளைஞர்களே, உங்கள் ஒவ்வொருவரையும் இறைவனிடம் இவ்வாறு சொல்ல அழைக்க விரும்புகிறேன்: "இயேசுவே, என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் நண்பர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், அதனால், உம்மை அரவணைப்பதால், நான் சந்திக்கும் எவருக்கும் பயணத்தில் ஒரு நண்பனாக இருக்க முடியும். ஆண்டவரே, என்னைச் சந்திப்பவர்கள், என் வரம்புகள் மற்றும் பலவீனங்கள் மத்தியிலும் கூட, உம்மைச் சந்திக்க அருள்தாரும்."

இந்த வார்த்தைகளை செபிப்பதன் வழியாக, சிலுவையில் அறையப்பட்ட இறைவனைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நமது உரையாடல் தொடரும், ஏனென்றால் நம் இதயங்கள் அவரில் ஒன்றுபடும். நாம் நற்கருணையில் கிறிஸ்துவை வணங்கும் ஒவ்வொரு முறையும், நம் இதயங்கள் அவரில் ஒன்றுபடும்.

இறுதியாக, உங்களுக்காக எனது பிரார்த்தனை என்னவெனில், நீங்கள் மகிழ்ச்சியுடனும் துணிவுடனும் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்! மேலும் "இயேசுவே, எங்களை அன்பு செய்ததற்கு நன்றி" என்று கூறுவோம். ஆண்டவரே எங்களுடன்  தங்கும் என்று கேட்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஆகஸ்ட் 2025, 11:15