இயேசு தேர்ந்தெடுத்த இடுக்கமான வாயில்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசு தனது வாழ்வில் வெற்றி மற்றும் ஆற்றலுக்கான எளிமையான பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக, நம்மை மீட்பதற்காக இடுக்கமான வாயிலைத் தேர்ந்தெடுத்து அதன்வழியாக நம்மை அன்பு செய்தார் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்டு 24, ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான இடுக்கமான வாயில் என்ற பகுதி குறித்தக் கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அன்பு மற்றும் இரக்கம் நிறைந்த தந்தையாக கடவுள் இருக்கின்றார், நம்மை வரவேற்க எப்போதும் திறந்த கரங்களுடன் இருக்கிறார் எனில், மீட்பிற்கான வாயில் இடுக்கமானது என்று இயேசு ஏன் கூறுகிறார்? என கேள்வி எழுப்பிய திருத்தந்தை அவர்கள், இவ்வார்த்தைகளின் வழியாகக் கடவுள் நமது ஊக்கத்தை தடுக்கவில்லை மாறாக, ஏற்கனவே தாங்கள் மீட்கப்பட்டதாக நினைப்பவர்கள், சமயங்களைப் பின்பற்றுபவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக உணர்ந்தவர்கள் ஆகிய அனைவரின் எண்ணத்தை அசைப்பதற்காகவே அவ்வாறு கூறினார் என்றும் எடுத்துரைத்தார்.
தங்களது இதயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், சமயக் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டும் போதும் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும், வாழ்லிலிருந்து வேறுபட்ட கலாச்சாரத்தைக் கடவுள் விரும்பவில்லை, உடன்பிறந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பைப் பகிராமல், நீதியை பயிற்சிக்காமல் செய்யப்படும் வழிபாடுகளும் பலிகளும் வீணானவை என்றும் கூறினார் திருத்தந்தை.
இக்காரணத்திற்காகவே, அவர்கள் இயேசுவோடு உண்டு, குடித்து உரையாடி அவரது போதனைகளைக் கேட்டதாக கூறும்போது இயேசு, “நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என கூறுகின்றார் என்றும், “எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பவர்களுக்கு, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுகின்றார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நம்பிக்கையை வார்த்தைகளினால் உறுதிப்படுத்துவது மட்டும் போதாது என்றும், நம்பிக்கை நமது முழு வாழ்க்கையையும் தழுவும்போது, தேர்ந்தெடுத்தல்களுக்கான ஓர் அளவுகோலாக மாறும்போது, அது நம்மை நன்மைக்காக அர்ப்பணித்து, இயேசுவைப்போல அன்பில் நம்மை ஆழ்த்துபவர்களாக மாறச் செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை
இயேசுவே நமது நம்பிக்கையின் அளவுகோல், நாம் மீட்கப்படுவதற்கான பாதை என்றும், அவருடைய அன்பை நமது வாழ்க்கையில் நாம் வாழ்ந்து நீதி மற்றும் அமைதிக்காக உழைப்பவர்களாக மாறுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
சில நேரங்களில் இது கடினமான மற்றும் பிரபலமற்ற தேர்ந்தெடுப்புக்கள், நமது சொந்த சுயநலத்திற்கு எதிராகப் போராடுதல், மற்றவர்களுக்காக நம்மைச் செலவிடுதல், தீமையின் தர்க்கம் மேலோங்கத் தோன்றும்போது நன்மையில் விடாமுயற்சியுடன் இருத்தல் போன்றவற்றை நீதி மற்றும் அமைதிக்காக உழைப்பவர்கள் என்ற சொல் குறிக்கிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் இந்த இடுக்கமான வாயிலைக் கடக்கும்போது, வாழ்க்கை நமக்கு முன் ஒரு புதிய வழியில் திறக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம் என்றும் கூறினார்.
இதன் வழியாகக் கடவுளின் பரந்த இதயத்திலும், அவர் நமக்காகத் தயாரித்த நிலையான விருந்தின் மகிழ்ச்சியிலும் நுழைவோம் என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நற்செய்தி வலியுறுத்தும் "இடுக்கமான வாயில்" வழியாக துணிவுடன் கடந்து செல்ல கன்னி மரியாவை நாம் வேண்டிக்கொள்வோம் என்றும், இதனால் நாம் தந்தையாகியக் கடவுளது அன்பின் அகலத்திற்கு மகிழ்ச்சியுடன் நம்மைத் திறக்க முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்