MAP

கடவுளின் கொடையைப் பிறருக்காகப் பயன்படுத்துவோம்

அன்பு மட்டுமே நம் இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்து, நம்மை மேலும் மேலும் கடவுளைப் போல ஆக்குகிறது. - திருத்தந்தை 14-ஆம் லியோ

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் நமக்குக் கொடுத்த கொடைகளை நமக்காகவே வைத்திருக்காமல், மற்றவர்களின் நன்மைக்காக, குறிப்பாக நமது உதவி மிகவும் தேவைப்படுபவர்களின் நன்மைக்காக அவற்றை தாராளமாகப் பயன்படுத்த வேண்டும் என கடவுள் நமக்கு அறிவுறுத்துகிறார் என்றும், இது நம்மிடம் உள்ள பொருள்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, நமது திறமைகள், நேரம், அன்பு, உடனிருப்பு மற்றும் உள்ளுணர்வை வெளிப்படுத்துவது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 10, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம் மீட்பிற்காக சிலுவையில் தன்னையேக் கொடுப்பதற்காக எருசலேம் நோக்கிச் செல்லும் வழியில் இயேசு, “உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்” என்ற வார்த்தைகளை உச்சரிப்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், இரக்கத்தின் செயல்கள் நமது இருப்பின் புதையலை வைத்துக்கொள்வதற்கான மிகச் சிறப்பான, பாதுகாப்பான, இலாபகரமான வங்கி என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நற்செய்தியில் குறிப்பிடப்படும்( மாற்கு 12:41-44). ஏழைக் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகளுடன் செல்வராகத் திகழ்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தூய அகுஸ்தீனாரின் வார்த்தைகளான “ஒருவர் கொடுப்பதிலிருந்து வேறுபட்ட ஒன்றைப் பெறுகின்றார் அது தங்கமோ வெள்ளியோ அல்ல மாறாக நிலைவாழ்வு” என்றும், கூறினார்

கடவுளின் திட்டத்தில், நம் ஒவ்வொருவரையும் ஒரு தனித்துவமான, விலைமதிப்பற்ற நன்மையாக, ஒரு உயிருள்ள, துடிக்கும் மூலதனமாக மாற்றுகின்ற அனைத்தும், வளர வளர வளர்க்கப்பட்டு முதலீடு செய்யப்பட வேண்டும், இல்லையெனில் அது வாடி அதன் மதிப்பை இழக்கிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அது திருடர்களைப் போல, ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே மாற்றுவதற்காக அதை பயன்படுத்துபவர்களின் தயவில் அது இழக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கடவுளின் கொடையானது இப்படி வீணாகப் போகக் கூடாது. அதை உணர்ந்து வெளிப்படுத்துவதற்குரிய இடம், சுதந்திரம் மற்றும் உறவுகள் தேவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அன்பு மட்டுமே நம் இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்து, நம்மை மேலும் மேலும் கடவுளைப் போல ஆக்குகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

தனது குழந்தையை அரவணைக்கும் தாய், இந்த உலகிலேயே மிகுந்த செல்வர் அல்லவா? அன்பு செய்யும் இருவர் தங்களை அரசன் அரசியாக உணர்வதில்லையா? இப்படி பல உதாரணங்களைக் கூறலாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குடும்பம், பங்கு, பள்ளி, பணியாற்றும் இடம் என எங்கிருந்தாலும் அன்பு செய்வதற்கான வாய்ப்பை தவறவிடாதிருப்போம் என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய விழிப்புணர்வையே இயேசு நம்மிடம் கேட்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவர் நம்முடன் இருப்பது போல நாமும் எப்போதும் கவனமாக, தயாராக, ஒருவர் மற்றவர் மேல் உள்ளூணர்வு உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வலியுறுத்துகின்றார் என்று எடுத்துரைத்தார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறுவது போலவும் இளைஞர் யூபிலி சிறப்பிக்க உரோம் நகர் வந்திருந்த இளைஞர்கள் போலவும், பல பிரிவுகளால் குறிக்கப்பட்ட உலகில், இரக்கம் மற்றும் அமைதியின் "காவலாளிகளாக" இருக்க முயல்வோம் என்றும், விடியற்கால விண்மீனாகிய அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஆகஸ்ட் 2025, 13:21

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >