MAP

வித்தியாசமான உலகம் சாத்தியம் என்பதன் அடையாளம் இளைஞர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லிஸ்பனில் திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்த அழைப்பை புதுப்பிக்கும் வகையில், 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 8 வரை கொரியாவின் சியோலில் உலக இளைஞர் நாள் நடைபெற இருப்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மாறுபட்ட வித்தியாசமான ஒரு உலகம் சாத்தியமானது என்பதற்கு அடையாளமாக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றும், அந்த உலகமானது மோதல்கள் மற்றும் ஆயுதங்களால் அல்ல, மாறாக உரையாடல்களால் தீர்க்கப்படுகின்றது, உடன்பிறந்த உணர்வு, நட்புறவு கொண்ட உலகமாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.   

ஆகஸ்ட் 3, ஞாயிறன்று Tor Vergata பகுதியில் நடைபெற்ற இளைஞர்களுக்கான யூபிலி திருப்பலியின் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருநற்கருணை வழிபாட்டின் வழியாகக் கிறிஸ்து நம் மத்தியிலும், நமக்குள்ளும் இருக்கின்றார் என்றும் வலியுறுத்தினார்.

இந்த இளைஞர்களுக்கான யூபிலி நாள் கொண்டாட்டம் முழுவதும் நம்மோடு உடன் இருந்து நம்மை வழிநடத்திய இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இந்நிகழ்வானது திருஅவைக்கும் உலகம் முழுமைக்கும் அருள்கொடையாக இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

இளைஞர் யூபிலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், இந்நாள்களில் விண்ணகம் சேர்ந்த இஸ்பெயின் மற்றும் எகிப்தை சார்ந்த இளைஞர்களான மரியா மற்றும் பாஸ்கல் இருவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனிடம் அவர்களை ஒப்படைத்து செபிப்பதாகக் கூறினார்.

உலகத்திற்கான அமைதி, நம்பிக்கை கொண்ட நாம், சக மனிதர்களால் மிகக் கடுமையான தீமைகளை அனுபவிக்கும் இளைஞர்களுடன் கிறிஸ்துவின் ஒன்றிப்பில் இணைந்து நமது உடனிருப்பை வெளிப்படுத்துவோம் என்றும், காசா, உக்ரைன், போன்ற போரினால் இரத்தம் சிந்தும், நிலத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவருடனும் நமது உடனிருப்பை வெளிப்படுத்துவோம் அவர்களுக்காக செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வித்தியாசமான உலகம் கிறிஸ்துவுடன் சாத்தியம்! அவரது அன்பால், அவரது மன்னிப்பால், அவரது ஆவியின் ஆற்றலால் சாத்தியம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கொடியின் கிளைகளாக இயேசுவுடன் நாம் இணைந்தால், அதிக கனிகளைக் கொடுப்பவர்களாக, பூமிக்கு உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சம் தருபவர்களாகவும் இருக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

இளைஞர்கள் எங்கு வாழ்ந்தாலும் நம்பிக்கையின் விதைகளாக இருக்க வேண்டும் என்றும், குடும்பம், நண்பர்கள், பள்ளி, பணி, விளையாட்டு என எல்லா இடங்களிலும், இயேசுவை நமது எதிர்நோக்காகக் கொண்டு நம்பிக்கையின் விதைகளாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இளைஞர்களுக்கான எதிர்நோக்கின் திருப்பயணம் தொடர்ந்து ஆசியாவிற்கு நம்மை  அழைத்துச் செல்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லிஸ்பனில் திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்த அழைப்பை புதுப்பிக்கும் வகையில், 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 முதல் 8 வரை கொரியாவின் சியோலில் உலக இளைஞர் நாள் நடைபெற இருப்பதை எடுத்துரைத்தார்.

“துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்பட இருக்கும் உலக இளைஞர் நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், எதிர்நோக்கு நமது இதயங்களில் வாழ்கின்றது, துன்பத்தையும் இறப்பையும் வென்ற உயிர்த்த கிறிஸ்துவைத் துணிவுடன் எடுத்துரைக்க ஆற்றல் தருகின்றது என்றும் கூறினார்.

சியோலில் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் என்று கூறி இளைஞர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் “ஒன்றிணைந்து கனவு காண்போம், ஒன்றிணைந்து எதிர்நோக்குவோம், கன்னி மரியாவின் பாதுகாப்பில் உங்கள் அனைவரையும் ஒப்படைக்கின்றேன்” என்று கூறி மூவேளை செப உரையினை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஆகஸ்ட் 2025, 13:06

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >