அதிலாபாத், பெல்தங்காடி மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சீரோ-மலபார் தலத்திருஅவையின் ஆயர் பேரவையினரால் அதிலாபாத் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அனுமதியுடன் அருள்பணி Joseph Thachaparambath அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்டு 28, வியாழனன்று வெளியிட்ட திருப்பீடத்தகவல்களின்படி அதிலாபாத் மறைமாவட்ட ஆயராக அமலமரி கார்மேல் சபை துறவியான அருள்பணி Joseph Thachaparambath அவர்கள் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 28, அன்று சீரோ-மலபார் கீழைத்திருவையின் பேராயர் இரபேல் தாட்டில் அவர்கள், கக்கனாட்டின் புனித தோமையார் மலையிலுள்ள பேராயர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிலாபாத் மறைமாவட்டத்திற்கும் பெல்தங்காடி மறைமாவட்டத்திற்கும் புதிய ஆயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிவித்தார்.
பெல்தங்காடி மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜேம்ஸ் பட்டேரில் CMF
ஜெர்மனியில் கிளாரெட் சபையின் வூர்ஸ்பர்க் மறைமாநில பொருளாளராக தற்போது பணியாற்றி வரும் அருள்பணி ஜேம்ஸ் பட்டேரில் CMF அவர்கள், பேராயர் ரபேல் தாட்டில் அவர்களால் பெல்தங்காடி மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1962 ஜூலை 27 அன்று பெல்தங்காடி மறைமாவட்டத்திலுள்ள பாட்டியால் பங்கில் பிறந்தார். கிளாரெட் சபையில் இணைந்து, குரவிலங்காட்டில் உள்ள கிளாரெட் பவனில் துறவியர் பயிற்சியை முடித்தார். 1990 ஏப்ரல் 26 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அவர், உஜிரே மற்றும் சிறாடி பங்குகளில் பணியாற்றினார். பின்னர் ஜெர்மனியின் பிரெய்பர்க் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் (Pastoral Theology) மேற்படிப்பு முடித்தார். தற்போது ஜெர்மனியில் வூர்ஸ்பர்க் மறைமாநில கிளாரெட் சபையின் பொருளாளராக பணியாற்றுகிறார். மலையாளம், கன்னடம், துளு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
அதிலாபாத் மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜோசப் தச்சாபரம்பத் CMI
CMI புனித தோமையார் மறைமாநிலத்தின் மறைமாநில அதிபராக (Provincial Superior) பணியாற்றி வரும் அருள்பணி ஜோசப் தச்சாபரம்பத் CMI அவர்கள், அதிலாபாத் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1969 பிப்ரவரி 24 அன்று இடுக்கி மறைமாவட்டத்தில் உள்ள நாலுமுக்கு – நாசரத்வழி பங்கில் பிறந்தார். புனித தோமையார் மறைமாநில CMI துறவுசபையில் இணைந்து குருத்துவப் பயிற்சி பெற்றார். 1997 ஜனவரி 1 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். மறைமாவட்டத்தில் பல பங்குகளில் பணியாற்றியதோடு, பல்வேறு நிர்வாக பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2023 முதல் புனித தோமையார் மறைமாநிலத்தின் மறைமாநில அதிபராக (Provincial Superior) உள்ளார். B.Ed., M.Ed. பட்டங்களை பெற்றுள்ளார். தற்போது ராஜஸ்தான், சன்ரைஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்