MAP

குழந்தைகளுடன் திருத்தந்தை குழந்தைகளுடன் திருத்தந்தை  (ANSA)

உக்ரைன் மற்றும் வத்திக்கானின் கோடைக்கால குழந்தைகள் முகாம்

ஒருவரையொருவர் மதிக்கவும், தன்னைப்போலவே பிறரைப் பார்க்கவும் குழந்தை பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்கினார் திருத்தந்தை.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

வத்திக்கானில் சிறார்களுக்கென இடம்பெறும்  கோடை முகாமில் பங்கேற்கும்  300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளையோர்களை 6ஆம் பவுல் அரங்கில் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் சந்தித்தார்.

இந்த முகாமில், இத்தாலியின் காரித்தாஸ் அமைப்பினரின் முயற்சியால் இத்தாலிக்கு வரவேற்கப்பட்ட 300 உக்ரைனிய குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

கோடைகால முகாமில் பணியாற்றும் இளம் தன்னார்வலர்களால் வரவேற்கப்பட்ட திருத்தந்தை, அங்குள்ள குழந்தைகளுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்பு  தனது  குழந்தை பருவத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, திருப்பலிக்குச் செல்வது, அங்கு நண்பர்களையும் மற்ற குழந்தைகளையும் சந்திப்பது போன்ற தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், குறிப்பாக தனது  சிறந்த நண்பர் இயேசுவே என்றும் கூறினார்.

பன்முகத்தன்மை மற்றும் வரவேற்பு குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, வேற்றுமைகள் பலவற்றைக் கடந்து எல்லோரும் நண்பர்களாகவும், சகோதர சகோதரிகளாகவும் இருக்க முடியும் என்று  உக்ரேனிய குழந்தைகளை ஆங்கிலத்தில் வாழ்த்தினார்.

மேலும், போர் பற்றிய கேள்வியெழுப்பிய ஒரு குழந்தைக்கு, போர் மற்றும் மோதலில் ஈடுபட வேண்டாமெனவும், வெறுப்பையோ, பொறாமையையோ ஒருபோதும் ஊக்குவிக்கவேணடாம் என்றும் பதிலளித்த  திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இயேசு நம் அனைவரையும் நண்பர்களாக இருக்கவே அழைக்கிறார்  என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.

ஒருவரையொருவர் மதிக்கவும், தன்னைப்போலவே பிறரைப் பார்க்கவும் குழந்தை பருவத்திலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மேலும் விளக்கினார் திருத்தந்தை.

முகாமில் குழந்தைகள் தயாரித்த கைவினைப்பொருட்கள், உக்ரேனியக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் போன்ற பல பரிசுகள் திருத்தந்தை 14ஆம் லியோ  அவர்களுக்கு வழங்கப்பட்டன.

இறுதியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட திருத்தந்தை, அனைவரையும் அருள்நிறைந்த மரியே என்ற செபத்தை சொல்ல அழைத்து, தமது ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூலை 2025, 14:51