உரோமையில் இளையோருக்கான யூபிலி விழா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எதிர்நோக்கின் யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக, இளையோருக்கான யூபிலி விழா, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை உரோமையில் சிறப்பிக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிகெல்லா.
யூபிலி விழாவின் நோக்கம்
இந்த நிகழ்வு மகிழ்ச்சியான, பன்முக கலாச்சாரக் கூடுதலாக (gathering) இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக, போர் நிகழும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைதி மற்றும் ஒன்றிப்புக்கான அடையாளத்தை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார் பேராயர் ஃபிசிகெல்லா.
இளையோரின் மொத்த எண்ணிக்கை
146 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 5,00,000 இளைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அவர்களில் 78 விழுக்காட்டினர் ஐரோப்பாவிலிருந்தும், மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளான ஈராக், தெற்கு சூடான் மற்றும் லெபனோனிலிருந்தும் வருவார்கள் என்றும் கூறினார் பேராயர் ஃபிசிகெல்லா.
தங்குமிடம் மற்றும் ஏற்பாடுகள் :
இவ்விழாவில் பங்கேற்கும் இளையோர் கோவில்கள், பள்ளிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உள்ளூர் குடும்பங்களுடன் தங்குவார்கள் என்றும், 20 உணவு நிலையங்கள் மற்றும் 3,500 விற்பனையாளர்கள் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் இச்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் பேராயர் ஃபிசிகெல்லா.
முக்கியமான நிகழ்வுகள்
நகரத்துடன் உரையாடல்:
ஜூலை 29 செவ்வாய் முதல் ஜூலை 31 வியாழன் வரை, உரோமை நகர சதுக்கங்களில் 70 நிகழ்வுகள் நடைபெறும், இதில் நாடகம், ஊடாடும் கண்காட்சிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்கேற்பு (எ.கா., காரித்தாஸ், மேரியின் உணவுகள்) உள்ளிட்டவை இடம்பெறும்.
அதிகாரப்பூர்வ வரவேற்புத் திருப்பலி :
ஜூலை 28, திங்களன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்புத் திருப்பலி நடைபெறும்.
பாவ ஏற்பு அறிக்கை நாள் :
ஆகஸ்ட் 1, வெள்ளிக்கிழமையன்று, சர்க்கஸ் மாக்சிமஸ் (Circus Maximus) எனப்படும் பண்டைய உரோமானிய தேர்-பந்தய அரங்கம் மற்றும் பொதுமக்கள் பொழுதுபோக்கு இடம் ஒன்றில், 200 அருள்பணியாளர்கள் ஒப்புரவு (பாவ மன்னிப்பு) வழங்குவர்.
திருத்தந்தையுடன் திருவிழிப்பு நிகழ்வு :
ஆகஸ்ட் 2, சனிக்கிழமையன்று, உரோமைப் பல்கலைக் கழகத்தில் (University of Rome Tor Vergata) இடம்பெறும் திருவிழிப்பு நிகழ்வில் மூன்று இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நிறைவுவிழாத் திருப்பலி :
ஆகஸ்ட் 3, ஞாயிற்றுக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் இடம்பெறும் கூட்டுத் திருப்பலியுடன் இளையோருக்கான யூபிலி விழா நிறைவடைகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்