MAP

உருவாக்கப் பயிற்சியாளர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை உருவாக்கப் பயிற்சியாளர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

நற்செய்தி அறிவிப்புக்கு முழுமையான உருவாக்கப் பயிற்சி தேவைப்படுகிறது

இயேசுவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுதல், உடன்பிறந்த உறவுநிலையில் வாழ்தல், திருமுழுக்குப் பெற்ற அனைவருடனும் பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை உருவாக்கப் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உருவாக்கப் பயிற்சியாளர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் தாங்கள் தொடர்ந்து நற்செய்தி மைய மாற்றத்தின் பாதையில் இருக்கிறோம் என்பதையும், அதேபோல், மறைப்பணியாளர்கள் தாங்கள்தான் நற்செய்தியைப் முதலில் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள், முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோமையிலுள்ள ‘திருத்தூதர்களின் அரசி’ எனப்படும் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் குருத்துவ உருவாக்கப் பயிற்சி குறித்த கருத்தரங்கம் ஒன்றின் பங்கேற்பாளர்களையும், பொதுநிலையினருக்கான புனித பிரான்சிஸ் சவேரியாரின் சகோதரர்கள் சபையினரையும் ஜூலை 25, வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

அவர்களின் பங்களிப்புகள் வேறுபட்டாலும், அவர்கள் பகிரப்பட்ட ஒரே நற்செய்திப் பணியால் ஒன்றுபட்டுள்ளனர் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்நற்செய்திப் பணிக்கு ஆழமான மற்றும் முழுமையான உருவாக்கப் பயிற்சி தேவைப்படுகிறது  என்றும், இது கிறிஸ்துவின் சாயலில் ஆன்மா மற்றும் மனிதகுலம் இரண்டையும் மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இயேசுவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுதல், உடன்பிறந்த உறவுநிலையில் வாழ்தல், திருமுழுக்குப் பெற்ற அனைவருடனும் பணியைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

01. இயேசுவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுதல்

உருவாக்கப் பயிற்சி என்பது கிறிஸ்துவுடனான தனிப்பட்ட மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் உறவில் வேரூன்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை,  உருவாக்கப் பயிற்சியாளர்களும் மறைப்பணியாளர்களும் தொடர்ந்து மனமாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், இந்த நட்பிலிருந்து வலிமையையும் நம்பகத்தன்மையையும் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

02. உடன்பிறந்த உறவுநிலையில் வாழ்தல்

ஆதரவான, உடன்பிறந்த உறவுகள் மூலம் மறைமாவட்ட மற்றும் துறவு சபைகளின் அருள்பணியாளர்கள் தங்களிடையே நிலவும் தனித்துவத்தையும் போட்டியையும் வெல்வதைக் கடந்து, ஆழமான மனித மற்றும் ஆன்மிக ஒன்றிப்புடன் வாழ வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

03. திருமுழுக்குப் பெற்ற அனைவருடனும் பணியைப் பகிர்ந்து கொள்ளுதல்

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மறைப்பணியாளர்கள் என்ற தொடக்க கால கிறிஸ்தவப் பார்வையைத் திருஅவை மீட்டெடுக்க வேண்டும் என்று மொழிந்த திருத்தந்தை, பொதுநிலையினர் மற்றும் துறவு சபையினரின் தனி வரங்கள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து, ஒத்துழைப்புடன் பணியாற்ற அருள்பணியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, அவர்தம் உருவாக்கப் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த பணிகளுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவரும் அன்னை மரியாவின் பரிந்துரை செபத்தால் ஆதரிக்கப்பட்டு மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும் முன்னேற அவர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூலை 2025, 12:31