MAP

குழந்தையுடன் அரைமண்டியிட்ட நிலையில் திருத்தந்தை குழந்தையுடன் அரைமண்டியிட்ட நிலையில் திருத்தந்தை  

குழந்தைகளுடன் திருத்தந்தை 14ஆம் லியோ!

தற்போது உரோமை மறைமாவட்டத்தின் ஆயரான பின்பும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது தனித்துவம் மாறாமல் செயல்படுகிறார் என்பதை வத்திக்கான் கோடைக்கால முகாமில் குழந்தைகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.

ஜெர்சிலின் டிக் ரோஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு  இரண்டு மாதங்கள் ஆன நிலையில்,  அவரைப் பற்றி வெளியாகிவரும்  புகைப்படங்கள் மிகவும் ஆழமான அர்த்தங்களை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 8-ஆம் தேதியன்று, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்,  தூய பேதுரு பெருங்கோவிலின் வளாகத்தின்  மையக் குவிமாடத்திலிருந்து வழங்கிய சிறப்பு ஆசிர்வாதத்தின் போது, மகிழ்ச்சியில் திளைத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் போன்ற சில காட்சிகளும் அவற்றில் அடங்கும்.

மேலும், மற்றுமொரு அறிய  புகைப்படமாக, குழந்தைகளுக்கான  வத்திக்கான் கோடை முகாமின் போது திருத்தந்தை, ஒரு சிறுமியின் அருகில், அரைமண்டியில் அமர்ந்தவாறு,  ஒரு வரைபடத்தைக் காட்டுகிறார். இந்தப்  புகைப்படம் எதிர்காலத்திற்கான ஒரு செய்தியையும், ஒரு புதுப்பார்வையையயும் தாங்கி நிற்கிறது.

இந்தப் புகைப்படத்தில் திருத்தந்தை புன்னகையுடன் புகைப்படம் எடுக்கும் நபரை பார்க்கிறார், அதேவேளையில், இந்தத்  தருணத்தால் ஈர்க்கப்பட்ட சிறுமி புகைப்படக் கருவியைப்  பார்க்காமல், தனது புன்னகை நிறைந்த பார்வையை திருத்தந்தையின் மீது பதிக்கிறார்.

வத்திக்கானின் கோடைக்கால முகாமில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், சிறுமியின் நிலைக்கு ஏற்றவாறு தாழ்ந்து அமரும் திருத்தந்தை, தனது செயல் வழியாக, உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய திசையைக் காட்டுகிறார்.

குழந்தைகளை அவர்களின் நிலையில் இருந்து நோக்கி, உலகை அவர்களின் கண்கள் வழியாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இப்புகைப்படம் நம்மை வியப்பூட்டுவதற்கான காரணமாக அமைகிறது.

“சிறு  குழந்தைகளை  என்னிடம் வரவிடுங்கள்” என்ற வார்த்தைகளைச் சொல்லி, தொந்தரவு செய்யும் குழந்தைகளை விரட்ட முயன்ற சீடர்களை, இயேசு கடிந்து கொண்டது போல, நாமும் நம்மைத் குழந்தைகளின் நிலைக்குத் தாழ்த்தும் மனத்துணிவு இருந்தால், மனிதகுலத்தின் போக்கு மாற்றம் பெரும்.

வலிமையானவர்கள் சிறியவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக, பெரியவர்களால் தீர்மானிக்கப்படும் போர்களில் குழந்தைகள் தாம் முதலில் பாதிக்கப்படுகின்றனர்.

"இந்த உலகில் உண்மையான அமைதியை நாம் நிலைநாட்ட வேண்டுமென்றால், போருக்கு எதிராக ஓர் உண்மையான போரை நடத்த வேண்டுமென்றால், நாம் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்" என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

பெரு நாட்டில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆயராகவும் மறைப்பணியாளராகவும் பணியாற்றிய  போது,  குழந்தைகளை  அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து சந்தித்த எண்ணற்ற புகைப்படங்கள், அவரின்  எளிய மனதிற்குச் சான்றாக உள்ளன.

தற்போது உரோமை மறைமாவட்டத்தின் ஆயரான பின்பும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது தனித்துவம் மாறாமல் செயல்படுகிறார் என்பதை வத்திக்கான் கோடைக்கால முகாமில் குழந்தைகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் நமக்கு நினைவூட்டுகிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 ஜூலை 2025, 13:07