விசுவாச வாழ்விற்கு நீங்கள் சான்றுகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
முதியோரே, நீங்கள் அனைவரும் விசுவாச வாழ்விற்கு சான்று பகர்கின்றீர்கள் என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 21, இத்திங்களன்று காலை, காஸ்தல் கந்தோல்போவிலுள்ள சாந்தா மார்த்தா இல்லத்திற்குச் சென்று அங்குள்ள முதியோர்களைச் சந்தித்தபோது அவர்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
முன்னதாக, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான வில்லா பார்பெரினிக்கு அருகில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லத்திற்குத் திருத்தந்தை சென்றபோது, அங்குள்ள துறவற சபை அருள்சகோதரிகளால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அங்குள்ள சிற்றாலயத்தில் சிறிதுநேரம் அமைதியாக இறைவேண்டல் செய்த பிறகு 80 முதல் 101 வயதுடைய 20 முதியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களைத் தனிப்பட்ட முறையில் வரவேற்று உரையாடி மகிழ்ந்தார் திருத்தந்தை.
இந்தச் சந்திப்பின்போது நற்செய்தியில் மார்த்தா மற்றும் மரியாவின் வாழ்வைக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அவர்களது வாழ்க்கையின் இந்த இறுதிக்கட்டத்தில் இறைவேண்டலையும் ஆன்மிகச் சிந்தனைகளையும் ஏற்று வாழுமாறு அவர்கள் அனைவரையும் ஊக்குவித்தார்.
இறுதியாக, அவர்களின் இறைவேண்டல்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்களை "நம்பிக்கையின் அடையாளங்கள்" என்று அழைத்ததுடன் திருஅவையில் அவர்களின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்