MAP

 இறைபதமடைந்த பேராயர் கர்தினால் André Vingt-Trois இறைபதமடைந்த பேராயர் கர்தினால் André Vingt-Trois  

பிரான்ஸ் கர்தினாலின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்!

“மீட்பரின் மேய்ப்புப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கர்தினால் André Vingt-Trois அவர்கள், பன்னிரண்டு ஆண்டுகளாகப் பற்றார்வமிக்க நல்ல மேய்ப்பராக விளங்கினார்” : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பிரான்சின் ஓய்வு பெற்ற பேராயர் கர்தினால் André Vingt-Trois அவர்கள் இறைப்பதம் அடைந்ததையொட்டி, அந்நாட்டின் தற்போதைய பேராயர் கர்தினால் Laurent Ulrich  அவர்களுக்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 18, வெள்ளிக்கிழமையன்று, கர்தினால் André Vingt-Trois அவர்கள், தனது  82-வது வயதில்  இறைபதமடைந்துள்ள வேளை, அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் செய்தியில்  பன்னிரண்டு ஆண்டுகளாகப் பற்றார்வமிக்க நல்ல மேய்ப்பராக அவர் விளங்கினார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும், கர்தினால் Vingt-Trois அவர்களின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும், குறிப்பாக, அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் அவரை கவனித்துக்கொண்ட Maison Marie-Thérèse இல்லத்தின் பணியாளர்களுக்கும், மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மீட்பரின்  மேய்ப்புப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கர்தினால் Vingt-Trois  அவர்கள், தனது இறுதி நாள்களில் இயேசுவின் சிலுவைப் பாடுகளை தனது உடலில் சுமந்து வாழ்ந்தார் என்றும், உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவரை அமைதியும் ஒளியும் நிறைந்த விண்ணக வீட்டிற்கு வரவேற்பாராக என்றும் கூறி தனது இறைவேண்டல்களை உரித்தாக்கியுள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, நம்பிக்கைக்குறிய பணியாளரான கர்தினால் Vingt-Trois அவர்களுக்கு, இறைவன் வாக்களித்த வெகுமதியான நிலைவாழ்வை வழங்குவாராக! என்றும் கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கியுள்ளார் திருத்தந்தை.

கர்தினால் André Vingt-Trois  அவர்களின் இறுதிச் சடங்கு பாரிஸ் நகரிலுள்ள Notre Dam பேராலயத்தில் ஜூலை 23, புதன்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும், இத்திருப்பலியை  இவ்வுயர் மறைவாவட்டத்தின் தற்போதைய பேராயர் Laurent Ulrich அவர்கள் தலைமையேற்று வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஜூலை 2025, 11:31