MAP

மறைக்கல்வியாளர்களே, நீங்கள் திருஅவையின் கருவூலங்கள்!

வியட்நாமின் 64,000-க்கும் மேற்பட்ட மறைக்கல்வியாளர்களுக்கு ஆற்றியுள்ள காணொளிச் செய்தியொன்றில், அந்நாட்டின் முதல் மறைச்சாட்சியும், மறைக்கல்வியாளர்களின் பாதுகாவலருமான அருளாளர் ஆண்ட்ரூ ஃபூ யென் அவர்களின் விசுவாச வாழ்வைப் பின்பற்றி வாழுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“வியட்நாம் தலத்திருஅவை அர்ப்பணிப்புள்ள மறைக்கல்வியாளர்களால் நிரம்பி வழிகிறது” என்றும், “பொதுநிலையினரான ஆண்களும் பெண்களும், குறிப்பாக அவர்களில் பெரும்பாலான இளையோர் ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு விசுவாசத்தைக் கற்பிப்பதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 26, சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் அருளாளர் ஆண்ட்ரூ ஃபூ யென் (Andrew Phú Yên), அவர்களின் 400-வது பிறந்தநாளை முன்னிட்டு பேராயர் Joseph Nguyễn Năng அவர்களின் தலைமையில் கூடியுள்ள வியட்நாமின் மறைக்கல்வியாளர்களுக்கு (Catechists)  வழங்கியுள்ள காணொளிச் செய்தியொன்றில் இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தை.

வியட்நாமின் முதல் மறைச்சாட்சியும், மறைக்கல்வியாளர்களின் பாதுகாவலருமான அருளாளர் ஆண்ட்ரூ ஃபூ யென் அவர்களின் பிறப்பு நாளில், அவரது ஆழமான இறைநம்பிக்கை, 19-வயதில் மறைச்சாட்சியம் ஏற்றது மற்றும் கிறிஸ்துவின் மீதான அசைக்க முடியாத அன்பை அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மறைக்கல்வி கற்பித்தல் வழியாக விசுவாசத்தைக் கொடுத்து அவர்களைச் சிறப்பாக வழிநடத்தி வருவதற்காக வியட்நாமின் 64,000-க்கும் மேற்பட்ட மறைக்கல்வியாளர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

“வியட்நாமின் கலாச்சார மற்றும் குடும்ப பாரம்பரியத்தில் வேரூன்றிய, இறைவேண்டலால் வலுப்படுத்தப்பட்ட ஒரு சமூக முயற்சிதான் மறைக்கல்வி கற்பித்தல் என்பது” என்றும் தனது காணொளிச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

அருளாளர் ஆண்ட்ரூவின் துணிவிலும், மறைபரப்புப் பேரார்வத்திலும் அகத்தூண்டுதல் பெறுமாறு மறைக்கல்வியாளர்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, அவர்களின் நம்பிக்கை, குடும்பங்கள் மற்றும் தேசிய அடையாளத்துடன் இணைந்திருக்கவும் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உரோமையில் இளையோருக்கான யூபிலி விழா நெருங்கி வரும் இவ்வேளையில், உலகளாவிய இளையோருடன் ஆன்மிக ரீதியில் ஒன்றிணைந்து, கிறிஸ்துவின் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

அன்னை கன்னி மரியா மற்றும் அருளாளர் ஆண்ட்ரூ இருவரின் பரிந்துரை செபங்களிலும், பாதுகாவலிலும் அவர்களை ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, மறைக்கல்வியாளர்களாகிய அவர்கள் அனைவரும் தங்களின் பணியை மகிழ்வுடன் தொடர்ந்து ஆற்றுமாறு கேட்டுக்கொண்டு தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூலை 2025, 14:40