பாலஸ்தீன அரசுத் தலைவருடன் திருத்தந்தை உரையாடினார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியில் தொடரும் வன்முறைக்கு மத்தியில், ஜூலை 21, இத்திங்கள்கிழமை காலை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார் என்று தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களிடமிருந்து, திருத்தந்தை அழைப்பைப் பெற்றார் என்றும், இந்த உரையாடலின்போது, காசா பகுதியில் இடம்பெற்று வரும் மோதலில் அண்மைய முன்னேற்றங்கள் மற்றும் மேற்குக் கரையில் நிகழ்ந்து வரும் வன்முறை குறித்து விவாதித்தனர் என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.
மேலும் இந்தத் தொலைபேசி அழைப்பின் போது, திருத்தந்தை, அனைத்துலக மனிதாபிமான சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் என்றும், குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் புனித தளங்களைப் பாதுகாப்பதற்கான கடமை, மற்றும் மக்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்வதைத் தடை செய்தல் குறித்தும் வலியுறுத்தினார் என்றும் உரைக்கிறது அதன் அறிக்கை.
இந்த உரையாடலின்போது, துயரம் நிறைந்த மனிதாபிமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மோதலால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவி வழங்குவதற்கும், போதுமான மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கும் அவசரத் தேவை வலியுறுத்தப்பட்டது என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக, 2015- ஆம் ஆண்டு, ஜூன் 26-ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டு, 2016-ஆம் ஆண்டு, ஜனவரி 2-ஆம் தேதி முதல் அமலில் உள்ள, திருப்பீடத்திற்கும் பாலஸ்தீன அரசுக்கும் இடையிலான விரிவான ஒப்பந்தத்தின் அனுகூலமான பத்தாவது ஆண்டு நிறைவையும் திருத்தந்தை நினைவு கூர்ந்தார் என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்