MAP

காசாவில் உள்ளத் திருக்குடும்ப கோவில் காசாவில் உள்ளத் திருக்குடும்ப கோவில் 

காசாவில் போர் நிறுத்தத்திற்கு திருத்தந்தை மீண்டும் அழைப்பு

போர் நிறுத்தத்திற்கும் அமைதிக்கும் திருத்தந்தை மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும், பேச்சு வார்த்தைகள், ஒப்புரவு, மத்தியக் கிழக்கில் நீடித்த அமைதி ஆகியவை குறித்த நம்பிக்கையை வெளியிடுவதாகவும் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜூலை 18, வியாழக்கிழமையன்று காலை இஸ்ராயேல் இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளான காசாவின் திருக்குடும்ப கத்தோலிக்க கோவில் பங்குதளத்தில் வாழும் மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டை வெளியிட்டு தந்திச் செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

காசா கத்தோலிக்க கோவில் தாக்கப்பட்டததைத் தொடர்ந்து திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு திருத்தந்தையின் சார்பில் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியியுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உடனடி போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என திருத்தந்தை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ராயேல் இராணுவத்தின் இந்த தாக்குதலால் காயமுற்ற பங்குதள அருள்பணியாளர் கபிரியேல் ரொமெனெல்லி உட்பட அனைத்து பங்குதள மக்களுடனும் ஆன்மீக முறையில் மிக நெருக்கமாக இருப்பதாகவும், உயிரிழந்தவர்களுக்காக ஜெபிப்பதாகவும் திருத்தந்தையின் அக்கறையை வெளியிட்டுள்ளது திருப்பீடச் செயலரின் தந்திச் செய்தி. 

போர் நிறுத்தத்திற்கும் அமைதிக்கும் திருத்தந்தை மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும், பேச்சு வார்த்தைகள், ஒப்புரவு, மத்தியக் கிழக்கில் நீடித்த அமைதி ஆகியவை குறித்த நம்பிக்கையை வெளியிடுவதாகவும் அச்செய்தி மீண்டும் எடுத்துரைக்கிறது.

இத்தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால்  பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள், மனிதாபிமான முறையிலும், ஒழுக்க ரீதியாகவும் நியாயப்படுத்தப்பட முடியாத இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துத் தலைவர்களும் தங்கள் குரலை எழுப்பவேண்டும் என விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, காசா திருக்குடும்ப பங்குதள வளாகத்தில் இடம்பெற்ற இஸ்ராயேல் இராணுவத்தின் தாக்குதலுக்கு எதிராக, யெருசலேமின் கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தந்தையர்களும் தலைவர்களும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

வியாழக்கிழமையன்று இடம்பெற்ற இஸ்ராயேல் இராணுவ தாக்குதலால் மூன்று பேர் இறந்துள்ளனர், பங்குதள அருள்பணியாளர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

காசாவின் ஒரே கத்தோலிக்கப் பங்குதளமான திருக்குடும்பக் கோவில் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஏறக்குறைய 500 பேருக்கு  புகலிடம் கொடுக்கப்பட்டு அவர்கள் அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காசா மோதல் துவங்கியதிலிருந்து இதுவரை 58,313 பாலஸ்தீனியர்கள், 1,983 இஸ்ராயேலர்கள் உட்பட 60,200 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் நல அமைச்சகம் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜூலை 2025, 16:05