வங்கதேச விமான விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூலை 22, செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணி அளவில் (உள்ளூர் நேரம்) வங்கதேசத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக் குறித்து தான் மிகவும் வருத்தம் அடைந்ததாக இரங்கல் செய்தியொன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த விபத்தில் இறந்த அனைவரையும் இரக்கமுள்ள இறைவனின் பதம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகவும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இந்த இரங்கல் செய்தியில், விபத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் ஆறுதல் பெறவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலமடையவும் இறைவேண்டல் செய்வதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை.
மேலும், இந்தத் துயரத்தால் பாதிக்கப்பட்ட முழு பள்ளிச் சமூகத்திற்கும், அமைதி மற்றும் வலிமையின் தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டுவதாவும் கூறி தனது இரங்கல் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்தச் சம்பவம் வங்க தேசத் தலைநகரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து என்றும், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இவ்விபத்து நேர்ந்தது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கும் அதேவேளை, உயர் மட்ட விமானப்படை குழு ஒன்று விபத்திற்கான காரணத்தை விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்