MAP

ஆர்த்தடாக்ஸ்-கத்தோலிக்கக் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணத்தின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை ஆர்த்தடாக்ஸ்-கத்தோலிக்கக் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணத்தின் பங்கேற்பாளர்களுடன் திருத்தந்தை   (@Vatican Media)

நம்பிக்கையின் வேர்களுக்குத் திரும்புவோம்!

கிறிஸ்தவர்கள் தங்கள் பொதுவான நம்பிக்கையின் வேரான எருசலேமுக்கு ஆன்மிக ரீதியில் திரும்பவும், இன்றைய உலகில் கடவுளின் ஆறுதல் மற்றும் அமைதியின் முகவர்களாகவும் இருக்கவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நமது விசுவாசத்தின் வேர்களுக்கு நாம் திரும்புவது, கடவுளின் ஆறுதலின் கொடையை  நாம் அனைவரும் அனுபவிக்கச் செய்து, நல்ல சமாரியரைப் போல, இன்றைய மனிதகுலத்தின் மீது ஆறுதலின் எண்ணெயையும் மகிழ்ச்சியின் திராட்சை  மதுவையும் ஊற்றுவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குவதாக" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 17, வியாழக்கிழமையன்று, அமெரிக்காவிலிருந்து உரோமைக்கு வந்துள்ள ஆர்த்தடாக்ஸ்-கத்தோலிக்க கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணத்தின் பங்கேற்பாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

குறிப்பாக, இந்த ஆண்டு நீசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், திருத்தூதர்களான பேதுரு, பவுல் மற்றும் அந்திரேயாவின் புனித தலங்களுக்குச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நீசேயாவின் நம்பிக்கை அறிக்கையில் பகிரப்பட்ட ஒன்றிப்பையும் இந்த ஆண்டு ஒரே தேதியில், இரு தேவாலயங்களும் ஒன்றிணைந்து, "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! அவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்!" என்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிக்கையிட்டுக் கொண்டாடுவதன் வலிமைவாய்ந்த அடையாளத்தையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

உலகளாவியத் துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ நம்பிக்கையின் அவசியத்தைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இக்கருத்தினை "எதிர்நோக்கின் திருப்பயணிகள்" என்ற இவ்வாண்டு யூபிலி ஆண்டு கருப்பொருளுடன் இணைத்து அவர்களுக்கு விளக்கினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவித்த திருத்தந்தை, 1965-ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பால் மற்றும் முதுபெரும் தந்தை அத்தேனாகோரசின் கூட்டுப் பிரகடனத்தை 1054-ஆம் ஆண்டின் பிளவைக் குணப்படுத்தியதில் ஒரு திருப்புமுனையாகக் குறிப்பிட்டார்.

திருச்சபைகளிடையே பணிவு மற்றும் உடன்பிறந்த உறவை வலியுறுத்தி, உண்மையான கவனம் என்பது முதன்மையானதன்மையில் அல்ல, மாறாக மீட்பரான கிறிஸ்துவின் அன்பின் சாட்சிகளாக இருப்பதில்தான் அடங்கியுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டி, தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூலை 2025, 13:56