நீதியான மற்றும் மனிதாபிமான சமூகத்தை உருவாக்குதல் வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
செய்யறிவால் (AI) இயக்கப்படும் டிஜிட்டல் புரட்சியால் ஏற்படும் மகத்தான ஆற்றல் மனிதகுலத்திற்கு ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 9, இப்புதனன்று, அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU - International Telecommunication Union) 160-வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் வழியாக தனது வாழ்த்துக்களை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ள வேளை இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் தனது செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கல்வி, நலவாழ்வு மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளை மாற்றியமைக்கும் செய்யறிவு (Artificial Intelligence), சமூகத்தில் ஏற்படுத்தும் ஆழமான தாக்கத்தையும் எடுத்துரைத்துள்ளதுடன், அறநெறிமுறை வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
அதேவேளையில், செய்யறிவு மனித பகுத்தறிவைப் பின்பற்றி பணிகளைத் திறமையாகச் செய்ய முடியும் என்றாலும், அதற்கு தார்மீக தேர்ந்து தெளிதல் (discernment) மற்றும் உண்மையான உறவுகளை உருவாக்கும் திறன் இல்லை என்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
செய்யறிவை மேம்படுத்துபவர்கள், மேலாளர்கள் மற்றும் பயனர்களின் நெறிமுறை பொறுப்பு, வெறும் செயல்திறனை விட மனித மாண்பிற்கு முன்னுரிமை அளிக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் நிர்வாக கட்டமைப்புகள், அமைதியின்மை (ஒழுங்கின் அமைதி) என்ற கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, நீதியான மற்றும் மனிதாபிமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல் ஆகிய மூன்றையும் தனது செய்தியில் அதிகம் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, பொது நலனுக்காக செய்யறிவை வடிவமைப்பதில் நெறிமுறைத் தெளிவு மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பை (inclusive cooperation) ஊக்குவித்துள்ள திருத்தந்தை, இந்த உச்சிமாநாட்டின் பங்கேற்பாளர்களுக்காக இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்