MAP

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  

அகிம்சையை ஊக்குவித்து அமைதியை ஏற்படுத்துங்கள்!

ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெறும் பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் தேசிய மன்றத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் அகிம்சையை ஊக்குவித்து அமைதியை ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“பரவலான ஆயுத மோதல்கள், மக்களிடையே பிளவுகள் மற்றும் கட்டாய இடம்பெயர்வு உள்ளிட்ட பல சவால்களை நமது உலகம் தற்போது எதிர்கொள்ளும் நிலையில், அகிம்சையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் அவசியமானவை” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ள மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெறும் பாக்ஸ் கிறிஸ்டி (Pax Christi) எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்க அமைதி இயக்கத்தின் தேசிய மன்றத்தின் பங்கேற்பாளர்களுக்கு ஜூலை 26, சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

“கொடிய வன்முறைகளுக்கு மத்தியில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, உயிர்த்தெழுந்த கிறிஸ்து திருத்தூதர்களுக்குக் கூறிய முதல் வார்த்தை "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்பதுதான் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, "ஆயுதமற்ற மற்றும் படைக்கலன்களைத் துறந்த, பணிவான மற்றும் விடாமுயற்சியுள்ள ஓர் அமைதிதான் அவர் சுட்டிக்காட்டியது என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது" என்றும் கூறியுள்ளார்.

“இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக  மாறுவதற்காக அவர்களை உலகிற்குத் தொடர்ந்து அனுப்புகிறார்” என்றும், “பங்குத்தளங்களில் சுற்றுப்புறங்களில், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒப்புரவை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருஅவை இருப்பதும், காணக்கூடியதும் மிகவும் முக்கியமானது” என்றும் மொழிந்துள்ளார் திருத்தந்தை (ஜூன் 17, 2025 அன்று இத்தாலிய ஆயர் பேரவைக்கு வழங்கிய உரை) .

"உங்களின் இந்தப் பேரவை அமெரிக்காவின் உள்ளூர் சமூகங்களை அமைதியின் இல்லங்களாக மாற்றுவதற்கான அகத்தூண்டலை அளிக்கட்டும், உரையாடல் வழியாக  பகைமைத் தணிக்கப்படும், நீதி கடைப்பிடிக்கப்படும், மன்னிப்புப் போற்றப்படும் இடங்களாக மாறட்டும் என்று நான் சிறப்பாக இறைவேண்டல் செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

“இந்த வழியில், தங்கள் சகோதரர் சகோதரிகளுடன் அமைதியுடன் வாழ புனித பவுலின் அழைப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் பலருக்கு நீங்கள் உதவுவீர்களாக” (காண்க. உரோ 12:18) என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

“இத்தகைய உணர்வுகளுடன் திருஅவையின் அன்னையாம் புனித கன்னி மரியாவின் பரிந்துரையில் உங்களின் இந்த மன்றத்தை ஒப்படைக்கிறேன்” என்று கூறி, அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூலை 2025, 13:46