இடம்பெயர்ந்தோரும் புலம்பெயர்ந்தோரும் நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர் மற்றும் அநீதியால் சூழப்பட்ட உலகில் கூட, இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையின் உருவகமாக உள்ளனர். அவர்களின் துணிவும் விடாமுயற்சியும் ஓர் ஆழமான நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன, இது சிறந்ததோர் எதிர்காலத்தைத் தேடி உயிருக்கு ஆபத்தான பயணங்களை எதிர்கொள்ள அவர்களுக்கு வலிமையை அளிக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் சிறப்பிக்கப்படவிருக்கிற, 111-வது உலக இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்காக, ஜூலை 25, வெள்ளிக்கிழமையன்று வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இன்றைய உலகளாவிய நெருக்கடிகளான போர்கள், காலநிலை மாற்றம் மற்றும் சமத்துவமின்மையின் பின்னணியில், நம்பிக்கை, இடம்பெயர்வு மற்றும் பணிக்கு இடையேயான ஆழமான தொடர்பை தனது செய்தியில் வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, அவை இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயர்ந்து செல்ல கட்டாயப்படுத்துகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும் இத்தகையப் பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ள சுயநல மனப்பான்மைகளையும் ஆயுதப் போட்டியையும் கண்டித்துள்ள திருத்தந்தை, இதற்குப் பதிலாக உலகளாவிய ஒன்றிப்பை வளர்க்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நம்பிக்கையின் செயலாக இடம்பெயர்வு
புலம்பெயர்ந்தோர் மகிழ்ச்சியையும் சிறந்த எதிர்காலத்தையும் தேடுகிறார்கள் என்றும், மீள்தன்மை, துணிவு மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் மொழிந்துள்ள திருத்தந்தை, புகலிடம் தேடிச் செல்லும் அவர்களின் பயணங்கள் இஸ்ரயேல் மக்களின் விவிலியக் கதைகளையும், விண்ணகத்தை நோக்கிய திருஅவையின் திருப்பயணத்தையும் பிரதிபலிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மறைபணியாளர்களாகப் புலம்பெயர்ந்தோர்
கத்தோலிக்கப் புலம்பெயர்ந்தோர் திருஅவைக்கு உயிராற்றலையும் புதுப்பித்தலையும் கொண்டு வருகின்றனர் என்றும், தாங்கள் செல்லும் புதிய பகுதிகளில் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் மூலம் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கு பங்களிக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
உலகலாவியத் திருஅவையின் பொறுப்பு
உலகலாவியத் திருஅவை நிலையானதாகவும் உலகியல் சார்ந்ததாகவும் மாறுவதைத் தவிர்த்து, ஒரு திருப்பயணச் சமூகமாகவே இருக்க வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோர் திருஅவையின் உண்மையான தன்மை மற்றும் பணியை நினைவூட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
ஒருவருக்கொருவர் வளமையூட்டுதல்
வரவேற்கும் சமூகங்கள் நம்பிக்கையின் சான்றுகளாக இருக்கவும், புலம்பெயர்ந்தோரை மனித குடும்பம் மற்றும் திருஅவையின் முழு உறுப்பினர்களாக அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகள் மற்றும் நம்பிக்கையிலிருந்து பயனடையவும் அழைக்கப்படுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
செயல்பாட்டுக்கான அழைப்பு:
புலம்பெயர்ந்தோர் மற்றும் உதவிபுரியும் சமூகங்கள் இருவரும் செயல்திறமுடைய நற்செய்தி அறிவிப்பாளர்களாக இருக்க வலியுறுத்தப்படுகிறனர் என்றும், திருஅவையின் ஒத்துழைப்பு மூலம் இந்தப் புலம்பெயர்ந்தோரின் பணிக்குச் சிறந்தத் தயாரிப்பு மற்றும் ஆதரவை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை.
இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அனைவரையும், கடவுளுடைய அரசுக்கு நெருக்கமான உலகத்தை அவர்கள் கட்டியெழுப்பும்போது, நம்பிக்கை அவர்களைத் தொடர்ந்து வழிநடத்தும் என்று கூறியுள்ள திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரின் ஆறுதலாக விளங்கும் அன்னை கன்னி மரியாவிடம் அவர்களை ஒப்புவித்து இறைவேண்டல் செய்வதாகக் கூறி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்