MAP

கோடைகாலத்தின் சிந்தனை தருணங்களை சுவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

காஸ்தல் கந்தோல்போவிலுள்ள அல்பானோ பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலிக்குத் தலைமை தாங்கிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், விருந்தோம்பல், சேவை, செவிசாய்த்தல் ஆகிய மூன்றும் கடவுளுடனும் மற்றவர்களுடனும் உறவை வளர்ப்பதற்கு அவசியமான கூறுகளாக அமைந்துள்ளதாக தனது மறையுரையில் எடுத்துக்காட்டினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"அல்பானோ பேராலயத்தில் இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்வடைகின்றேன், மேலும் இந்த உடன்பிறந்த உணர்வு மற்றும் கிறிஸ்தவ மகிழ்ச்சியுடன், கூடியிருக்கும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 20, இஞ்ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவிலுள்ள அல்பானோ பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, அன்றைய ஞாயிறு வாசகங்களிலிருந்து விருந்தோம்பல், சேவை, செவிசாய்த்தல் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

முதல் வாசகத்தில் ஆபிரகாமை சந்திக்கும் மூன்று மனிதர்களுக்கு அவர் எவ்வாறு விருந்தோம்பல் செய்தார் என்பதையும், அவரது அன்பு நிறைந்த செயல் அந்தத் தருணத்தை எப்படி தெய்வீகச் சந்திப்பாக மாற்றியது என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, கடவுள் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஒரு மகன் பிறக்கவிருப்பதை அறிவித்தார் என்றும், விருந்தோம்பல் வழியாக கடவுள் எவ்வாறு மனிதரின் வாழ்க்கையில் நுழைகிறார் என்பதை இது காட்டுகிறது என்றும் விளக்கினார்.

அவ்வாறே, மார்த்தாவும் மரியாவும் தங்கள் இல்லத்திற்கு வந்த இயேசுவுக்கு வழங்கிய விருந்தோம்பல் பற்றி நற்செய்தியிலிருந்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கேட்பதும் சேவை செய்வதும் எதிரெதிரான் செயல் அல்ல, மாறாக அவை உண்மையான கிறிஸ்தவ விருந்தோம்பலின் முழுமையாக்கவல்ல பரிமாணங்கள் என்று வலியுறுத்தினார்.

கடவுளுடனான தங்கள் உறவுக்கு முன்னுரிமை அளிக்கவும், குறிப்பாக கோடைகாலத்தில் அமைதி, இறைவேண்டல் மற்றும் சிந்தனைக்கு நேரம் ஒதுக்கவும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இது தனிநபர்கள் மிகவும் திறந்த மனம் கொண்டவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், அமைதியையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கவும் உதவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

அன்பு, செவிசாய்த்தல் மற்றும் சேவை வழியாக, உறவுகளை உருவாக்குவதற்கும் சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் கோடைகாலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு அனைவரையும் ஊக்குவித்து தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஜூலை 2025, 12:33