MAP

மறைந்த கர்தினால் Luis Pascual Dri மறைந்த கர்தினால் Luis Pascual Dri  

98 வயது அர்ஜெண்டினா கர்தினாலின் மறைவுக்கு இரங்கல்

திருஅவையில் இறைவனுக்காக பல ஆண்டுகள் சேவையாற்றி ஒப்புரவு அருள்சாதனத்தை வழங்கும் மிகச் சிறந்த ஊழியராகவும், ஆன்மீக இயக்குனராகவும், செயல்பட்டவர் அர்ஜெண்டினா நாட்டு கர்தினால் LUIS PASCUAL DRI

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அர்ஜெண்டினா நாட்டு கர்தினால் LUIS PASCUAL DRI அவர்கள் இறைபதம் அடைந்ததையொட்டி, அந்நாட்டு தலத்திருஅவைக்கு இரங்கல் செய்தி ஒன்றை திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் பெயரால் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பிரான்சிஸ்கன் கப்புச்சின் துறவுசபையைச் சார்ந்த 98 வயது கர்தினால் மரணமடைந்ததையொட்டி புவனெஸ் அய்ரஸ் பேராயர் JORGE IGNACIO GARCÍA CUERVA அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் தந்தி, கப்புச்சின் துறவு சபைக்கும், கர்தினாலின் உறவினர்களுக்கும், அவர் பணிபுரிந்த உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் விசுவாசிகளுக்கும் திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும்படி விண்ணப்பிக்கிறது.

முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த கர்தினால் LUIS PASCUAL அவர்கள், திருஅவையில் இறைவனுக்காக பல ஆண்டுகள் சேவையாற்றி ஒப்புரவு அருள்சாதனத்தை வழங்கும் மிகச் சிறந்த ஊழியராகவும், ஆன்மீக இயக்குனராகவும், செயல்பட்டவர் என அந்த இரங்கல் செய்தியில் பாராட்டும் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், கர்தினாலின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும் கூறியுள்ளார்.  

ஒப்புரவு அருளடையாளத்தை வழங்குவதில் அயராது உழைத்த கர்தினால் Luis Pascual அவர்கள், 1927ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அர்ஜெண்டினா நாட்டில் பிறந்தார். கப்புச்சின் துறவுசபையில் இணைந்த இவர், 2023ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்ட பின்னரும், 96ஆம் வயதிலும் ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் பணிகளை தொடர்ந்து நடத்தினார்.

ஜூன் மாதம் 30ஆம் தேதி, திங்கள்கிழமையன்று தன் 98ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார் கர்தினால் Luis Pascual Dri.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூலை 2025, 17:13