அமைதியை மேம்படுத்துவதில் திருஅவைத் தொடர்ந்து குரல் எழுப்புகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"ஒவ்வொருவரும் ஆயுதங்களை விட்டுச் செல்லவும், ஒவ்வொரு போருக்கும் பின்னால் இருக்கும் பணம் சம்பாதிக்கும் மனப்பான்மையை விட்டுவிடவும் நாம் ஊக்குவிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
உரோமைக்கு அருகிலுள்ள திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் 16 நாட்கள் தங்கிய பிறகு வத்திக்கானுக்குத் திரும்பும் வேளையில், அவரைச் சந்தித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, உலகளாவிய ஆயுத வர்த்தகத்தையும், போரைத் தூண்டுவதிலும் மனித வாழ்க்கையை மதிப்பிழக்கச் செய்வதிலும் அதன் பங்கையும் கண்டித்தார்.
மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்குமான அமைதியை ஏற்படுத்துவதிலும், மனித மாண்பைக் காப்பதிலும், மிகுந்த அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.
காசா போன்ற மோதல்கள் இடம்பெற்று வரும் பகுதிகளை தான் பார்வையிட விரும்பினாலும், அத்தகைய வருகைகள் உண்மையானத் தீர்வுகளுக்கு வழிவகுக்காது என்றும் அவர்களிடம் குறிப்பிட்டார் திருத்தந்தை.
திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் தான் கழித்த நேரத்தைப் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, அதை ஒரு "வேலை விடுமுறை" (working holiday) என்று கருதி, தற்போதைய நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் அவர்களிடம் விவரித்தார்.
மிகவும் குறிப்பாக, அமைதியை மேம்படுத்துவதில் திருஅவை எழுப்பும் குரலின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தைக் குறித்தும் அவர்களிடம் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்