காசா தாக்குதல் குறித்து திருத்தந்தை தொலைபேசி உரையாடல்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை பிட்சபாலா அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, காசாவின் மீதான தனது அக்கறை, இறைவேண்டல் மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், போர்நிறுத்தத்திற்கு மட்டுமல்ல, இந்தத் துயரமான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்ய விரும்புவதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் உறவு ஒன்றிப்பிற்கும், உறுதியளித்த இறைவேண்டல்களுக்கும் காசாவில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவரின் சார்பாகவும் கர்தினால் பிட்சபாலா அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அச்சூழலில், ஜூலை 18 வெள்ளியன்று, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர் மூன்றாம் தியோபிலஸ், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா ஆகிய இருவரும் காசாவில் உள்ள கத்தோலிக்க பங்குதளத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
ஜூலை 17 வியாழனன்று, காசாவின் திருக்குடும்ப ஆலயத்தின் மீது இஸ்ரயேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், அருள்பணியாளர் Gabriel Romanelli உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்றத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோரின் உடனிருக்க, கர்தினால் பிட்சபாலா, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் மூன்றாம் தியோபிலஸ் ஆகியோரும் காசாவிற்குச் சென்றுள்ளனர்.
காசாவின் அனைத்துக் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் நூற்றுக்கணக்கான டன் உணவுப் பொருட்கள், முதலுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்ல கர்தினால் மற்றும் மூன்றாம் தியோபிலஸ் ஆகிய இருவரும் ஏற்பாடுச் செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த அனைவரும் காசாவுக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்