நம் இல்லத்தின் கதவைத் தட்டுகிற ஆண்டவரை வரவேற்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் ஒவ்வொரு முறையும் ஆண்டவருடைய இறுதி உணவிற்கு அழைக்கப்பட்டு, நற்கருணைத் திருவிருந்தில் பங்கேற்கும்போது, கடவுள் தாமே "நமக்குப் பணிபுரிய வருகிறார்" என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 20, ஞாயிறன்று, உரோமைக்கு அருகிலுள்ள திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இன்றைய வாசகங்களின் அடிப்படையில் விருந்தோம்பல் குறித்த தனது சிந்தனைகளை இறைமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இன்றைய திருவழிபாடு, ஆபிரகாமும் அவரது மனைவி சாராவும், பின்னர் இயேசுவின் நண்பர்களான மார்த்தா மற்றும் மரியாளும் காட்டிய விருந்தோம்பலைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கிறது (காண்க, தொநூ 18:1-10; லூக் 10:38-42) என்று தனது உரையைத் தொடங்கிய திருத்தந்தை, விருந்தினராக இருப்பது என்றால் என்ன என்பதை கடவுள் முதலில் அறிந்திருந்தார் என்றும், அவர் இன்றும் நம் கதவருகில் நின்று தட்டுகிறார் (காண்க. திவெ 3:20) என்றும் தெரிவித்தார்.
மனத்தாழ்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் கவனிப்பு
கடவுள் விருந்தினராகவும் விருந்தளிப்பவராகவும் இருக்கிறார் என்றும், விருந்தோம்பலுக்கு வெறும் தாராள மனப்பான்மை மட்டுமல்ல, மாறாக, மனத்தாழ்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் கவனிப்பு மூன்றும் தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
மார்த்தா, நல்ல நோக்கத்துடன் இருந்தபோதிலும், இயேசுவை உண்மையாகச் சந்திக்கும் தருணத்தைத் தவறவிடுகிறாள் என்றும், அதேவேளையில் மரியா இறைவார்த்தையைக் கேட்கவும் இயேசுவுடன் உடனிருக்கவும் தேர்வு செய்கிறாள் என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
மரியாவைப் போல வாழ்வோம்
மரியாவைப் போல நல்ல பங்கை தேர்ந்துகொண்டு செயல்பட விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, குறிப்பாக, கோடை விடுமுறை காலத்தில், நம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, நன்றாக ஓய்வெடுத்து, கடவுள், மற்றவர்கள் மற்றும் இயற்கையுடனான அர்த்தமுள்ள சந்திப்புகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றும் சுட்டிக்காட்டினார்.
உண்மையான விருந்தோம்பல் நம் வாழ்க்கையை வளப்படுத்துவதால், மற்றவர்களை வரவேற்கவும் மற்றவர்களால் வரவேற்கப்படவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை விசுவாசிகளுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, இறுதியாக, முழுநிறைவான விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்து, திருஅவை அனைவருக்கும் திறந்த வீடாக இருக்க வேண்டுமென ஊக்குவித்து தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.
காசாவில் கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல்
தனது மூவேளை செப உரையின் இறுதியில், காசா நகரில் உள்ள திருக்குடும்ப கத்தோலிக்கப் பங்குத்தளத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் மூன்று கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்காகவும் மற்றும் பலர் காயமடைந்ததற்காகவும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார் திருத்தந்தை.
மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் இறைவேண்டல் செய்த திருத்தந்தை, காசாவில் இடம்பெற்று வரும் வன்முறையைக் கண்டித்த அதேவேளை, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், மனிதாபிமான சட்டத்தை மதிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய கிழக்கு கிறித்தவர்களுக்கு ஊக்கம்
மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும், உடனிருப்பையும் வழங்கிய திருத்தந்தை, பல்வேறு இயக்கங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த இளையோர் குழுக்கள் மற்றும் குடும்பங்கள் உட்பட, காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருப்பயணிகள் அனைவரையும் வரவேற்றார்.
மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு நன்றி
தலைவர்களுக்கான இறைவேண்டல் மாரத்தான் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த அதேவேளை, அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அவர்களை ஊக்குவித்து அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்