அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகளாக மாறுவோம்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, ‘அமைதி மற்றும் நம்பிக்கையின் விதைகள்’ என்ற கருப்பொருளைக் கொண்ட, இவ்வாண்டின், படைப்பின் பாதுகாப்பிற்கான இறைவேண்டலின் நாளுக்கென திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆண்டவர் இயேசு இறையரசை அறிவித்த போது மிக அதிகமாக விதை பற்றிய உருவகங்களை பயன்படுத்தினார் என்றும், தன்னுடைய பாடுகள் நெருங்கும் காலத்திலும் தன்னையே கோதுமை விதையுடன் ஒப்பிட்டு மடிந்து பலன் தர வேண்டும் என்று கூறியதையும் திருத்தந்தை தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
இறைவாக்கினர் எசாயா கூறுவது போல, கடவுளின் ஆவி வறண்ட பாலைவனத்தையும் ஒரு தோட்டமாக மாற்றும் வல்லமை உடையது; அது ஓய்வுக்கும் அமைதிக்கும் இடமாக மாறும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவில் நாமும் விதைகள் தான் என்றும், அதிலும் அமைதி மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விதைகள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், சட்ட மீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் அவற்றைத் தூண்டும் பசிக்கொடுமை போன்றவைகளால் பசுமைநிலங்கள் அழிக்கப்படுகின்றன என்றும், மாசுபாடு, உயிரின வகைகள் அழிவதெல்லாம் தீவிரமடைந்து வருகின்றன என்றும் தனது செய்தியில் கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், போர்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால் அதிகரித்துவரும் இயற்கை சீரழிவுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
இயற்கை சில நேரங்களில் பொருளாதார அல்லது அரசியல் இலாபத்திற்காக சந்தைப்படுத்தப்படுகிறது என்றும், இதனால் கடவுளின் படைப்பே ஒரு யுத்த களமாக மாறி வருகிறது என்றும் தனது செய்தியில் திருத்தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆண்டவர் இயேசுவால் படைக்கப்பட்டதும், மீட்கப்பட்டதுமான இந்த உலகை பாதுகாப்பது நம்பிக்கையாளர் ஒவ்வொருவரின் கடமை என்றும், இயற்கை அழிவுகளாலும், மாசுபடுதலினாலும் பாதிக்கப்படுகின்ற சகோதர சகோதரிகளின் மீது அக்கறை கொண்டு படைப்பை பாதுகாப்பது நமது நம்பிக்கையும் மனிதநேயமும் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
மேலும், இயற்கையை பாதுகாக்கும் விதமாக திருஅவையின் ஒரு விதையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் காஸ்தெல் கண்டோல்ஃபோவில் தொடங்கப்பட்ட Borgo Laudato Si’ திட்டத்தையும் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்