படைப்பைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பூமியின் மற்றும் ஏழைகளின் அழுகையை நாம் கேட்கிறோம், ஏனென்றால் இந்தக் கூக்குரல் கடவுளின் இதயத்தை எட்டியுள்ளது என்றும், நமது கோபம் அவருடைய கோபமாக வெளிப்பட்டுள்ளது, நமது பணியே அவருடைய பணியாகவும் அமைந்துள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 9, புதன்கிழமை, உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருமடலான 'இறைவா உமக்கே புகழ்' குறித்தும் தனது மறையுரையில் குறிப்பிட்டார்.
அச்சம் மற்றும் குழப்பத்தின் மத்தியில் நம்பிக்கையை அடையாளப்படுத்த புயலை அமைதிப்படுத்திய இயேசுவின் விவிலிய நிகழ்வைப் பயன்படுத்தி (மத் 8:23-27), புதிய வாழ்க்கையையும் அமைதியையும் கொண்டுவரும் அவரின் வலிமையைக் குறித்து தனது மறையுரையில் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்தப் பகுதி இயேசுவின் படைப்புடன் உள்ள ஆழமான தொடர்பை வலியுறுத்துகிறது என்றும், மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, உலகத்தைப் பற்றிய சிந்தனைமிக்க, கவனமுள்ள அணுகுமுறையைக் கோருகிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவே திருஅவையின் படைப்பாளர் மற்றும் தலைவர் என்பதையும், படைப்பைப் பராமரிப்பதும் அமைதியை மேம்படுத்துவதும் ஒரு பகிரப்பட்ட பணி என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும் திருவிவிலியத்திலிருந்தும், அசிசியின் புனித பிரான்சிஸ் மற்றும் புனித அகுஸ்தினார் போன்ற புனிதர்களின் வாழ்விலிருந்தும் இதுதொடர்புடைய சில பகுதிகளை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அனைத்து உயிரினங்களையும் சகோதரர் சகோதரிகளாக நோக்குவதன் முக்கியத்துவத்தையும், அன்பு மற்றும் பொறுப்பு வழியாக நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இறுதியாக, படைப்புடன் இணக்கமாக வாழ்வதையும், பாவம் மற்றும் அநீதியிலிருந்து விலகுவதையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் ஊக்குவித்த திருத்தந்தை, இந்தக் குணப்படுத்தும் பயணத்தில் பங்களிக்க அனைவருக்கும் அழைப்புவிடுத்து தனது மறையுரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்