தெளிந்து தேர்தலில் வழங்கப்படும் பயிற்சிக்காக இம்மாதத்தில் செபிப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
தெளிந்து தேர்தலில் வழங்கப்படும் பயிற்சிக்காக இம்மாதத்தில் செபிப்போம் என ஜூலை மாதத்திற்கான ஜெபக்கருத்தை இவ்வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
எவ்வாறு தெளிந்து தேர்வது என்பது குறித்து நாம் மீண்டும் கற்றுக்கொள்வதற்காக இறைவேண்டல் செய்வோம் என இம்மாத செபக்கருத்திற்கான செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை, இதன் வழி நாம் வாழ்வின் சரியான பாதையைக் கண்டுகொள்ளவும், கிறிஸ்து மற்றும் நற்செய்தியிலிருந்து நம்மை தூரமாக விலக்கிச் செல்பவை அனைத்தையும் அகற்றவும், இறை அருள் உதவும் என மேலும் கூறியுள்ளதுடன், இச்செய்தியை ஒரு செபமாகவே வடித்துள்ளார்.
தூய ஆவியாரே, நீரே எம் புரிந்துகொள்தலின் ஒளி, எம் முடிவுகளை வழிநடத்தும் மென்மையான மூச்சு, உம் குரலுக்கு கவனமுடன் செவிமடுக்கும் அருளை எமக்கு வழங்கி, எம் இதயத்தில் மறைந்துள்ள பாதைகளை தெளிந்து தேர்ந்து, அதன் வழி உமக்குத் தேவையானவைகளை நாங்கள் கண்டுகொண்டு, துன்பதுயர்களிலிருந்து எம் இதயத்தை விடுவிக்க நீரே உதவும்.
என் வாழ்வின் நடவடிக்கைகளில் சிறிது நேரம் ஒதுக்கி சிந்திக்கும் அருளை எனக்குத் தாரும். அதன் வழி நான், எவ்வகையில் செயல்படுகிறேன் என்பதை உணர்ந்து கொள்ளவும், செயல்படும் வழிகளைக் குறித்தும், நமக்குள் குடியிருக்கும் உணர்வுகள் குறித்தும் பல வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தாமல், அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதையும் முற்றிலும் தெரிந்து கொள்ளவும் அருளைத் தாரும்.
நற்செய்தியின் மகிழ்வை நோக்கி என்னை இட்டுச் செல்லும் என் விருப்பத் தேர்வுகளுக்காக நான் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
நான் என் பாதையில் சந்தேகங்களையும் சோர்வுகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தாலும், நான் போராட்டங்களை எதிர்கொண்டு, சிந்தித்து, ஆய்வு செய்து மீண்டும் துவக்க வேண்டிய சூழல் வந்தாலும், என் பயணத்தின் இறுதியில், நல் முடிவின் கனியாக உம் ஆறுதல் எனக்கு இருக்கும் என எழுதி தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்