MAP

கடவுளால் அதிகமாக அன்பு செய்யப்பட்ட அவரது பிள்ளைகள் நாம்

திருஅவை என்னும் பெரிய குடும்பத்தில், தந்தை தனது அன்பின் ஒவ்வொரு அடையாளச் செயல்கள் வழியாக நம் அனைவரையும் அதன் பங்கேற்பாளர்களாக மாற்றத் தயங்குவதில்லை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

விண்ணகத் தந்தையை நோக்கிய செபத்தின் வழியாக நமக்குள் நாமே வெளிப்படுத்தப்படுகின்றோம், விண்ணகத்தந்தை நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றார் என்பதை கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியானது நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், எவ்வளவு நம்பிக்கையுடன் விண்ணகத்தந்தையை நோக்கி நாம் செபிக்கின்றோமோ அவ்வளவுக்கு கடவுளால் அதிகமாக அன்பு செய்யப்பட்ட அவரது பிள்ளைகள் நாம் என்பதைக் கண்டறிகின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், விண்ணகத் தந்தையை நோக்கிய செபத்தின் வாயிலாக நாம் இறைத்தந்தையின் அன்பின் மகத்துவத்தை அறிந்துகொள்கின்றோம் என்றும் கூறினார்.

இன்றைய நற்செய்தியானது விண்ணகக் கடவுளின் தந்தைத்துவப் பண்புகளை சில உணர்வுப்பூர்வமான உருவகங்கள் வழியாக விவரிக்கிறது என்று மொழிந்த திருத்தந்தை அவர்கள், நண்பரை எதிர்பாராத விருந்தினராக வரவேற்க, அந்த நண்பருக்கு உதவ, நடு இரவில் எழுந்திருக்கும் ஒரு மனிதரின் உருவகம், அல்லது தனது குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கொடுப்பதில் அக்கறை கொண்ட ஒரு பெற்றோரின் உருவகம் போன்றவை இறைத்தந்தையின் பண்பினை அடையாளப்படுத்துகின்றன என்றும் கூறினார்.

நமது தவறுகள், தவறவிட்ட வாய்ப்புகள், தோல்விகள் போன்றவற்றிற்குப் பிறகு, இறைந்தந்தையிடம் திரும்பும் நாம், இரவின் எவ்வேளையில் வந்தாலும் கடவுள் நம்மை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார் என்பதை நற்செய்தி நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன என்றும், திருஅவை என்னும் பெரிய குடும்பத்தில், தந்தை தனது அன்பின் ஒவ்வொரு அடையாளச் செயல்கள் வழியாக நம் அனைவரையும் அதன் பங்கேற்பாளர்களாக மாற்றத் தயங்குவதில்லை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் இறைத்தந்தையை நோக்கி செபிக்கும்போது அவர் எப்போதும் நம் குரலைக் கேட்கிறார் என்றும், நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட வகைகளில் அதிக ஞானத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்படுவதால் சில சமயங்களில் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் வழிகளில் அவர் பதிலளிப்பதைக் காண்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

கடினமான அத்தருணங்களில் கூட நாம் நம்பிக்கையுடன் செபிப்பதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுளிடம் செபிக்கும்போது நாம் எப்போதும் ஒளியையும் பலத்தையும் காண்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இறைத்தந்தையை அப்பா தந்தாய் என்று அழைப்பதன் வாயிலாக கிறிஸ்துவை நமது சகோதரராக ஏற்று அன்பு செய்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைத்தந்தையைப்போல நாமும், அவரது நன்மை, பொறுமை, இரக்கம் ஆகியவற்றால் நம்மை மாற்றிக்கொள்ள அனுமதிப்பது முக்கியம், இதனால் அவரது முகம் ஒரு கண்ணாடியில் இருப்பது போல நம்மில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்தார்.

செபம், மற்றும் பிறரன்புச் செயல்கள் வழியாக நாமும் கடவுள் நம்மை அன்பு செய்வது போல அன்பாக உணரவும், பிறர் மீது அன்பை வெளிப்படுத்தவும் இன்றைய திருவழிபாட்டுமுறை நம்மை அழைக்கிறது என்றும், திறந்த மனப்பான்மை, விவேகம், இணக்கமான அக்கறை கொண்டு கடவுளின் இத்தகைய அழைப்பிற்கு பதிலளிக்க இறைத்தந்தையின் மென்மையான முகத்தை வெளிப்படுத்த அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஜூலை 2025, 13:01

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >