கடவுள் மீது கொண்ட அன்பின் உண்மையான வெளிப்பாடு இயேசு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுள் மீதும் மனிதன் மீதும் கொண்டுள்ள உண்மையான அன்பின் வெளிப்பாடாக இயேசு இருக்கின்றார் என்றும், அவரது அன்பு, தனக்கென்று வைத்திருக்காது பிறருக்குக் கொடுக்கும் அன்பு, மறுப்பு தெரிவிக்காது மன்னிக்கின்ற அன்பு, ஒருபோதும் கைவிடாது உதவுகின்ற அன்பு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமையன்று காஸ்தல் கந்தோல்போ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தின் நுழைவாயில் அருகே இருந்து (Piazza della Libertà) லிபெர்த்தா வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
“போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவிடம் கேட்கும் திருச்சட்ட அறிஞரின் கேள்வியுடன் ஆரம்பமாகும் இன்றைய நற்செய்தி வாசகமானது, மீட்பிற்கான விருப்பம், தோல்வி, தீமை மற்றும் இறப்பு இல்லாத வாழ்க்கைக்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
நிலையாக பெறவேண்டிய ஒரு நன்மையினை மனித இதயம் எதிர்பார்க்கின்றது என்றும், அது வலுக்கட்டாயமாகப் பெறவேண்டியதோ, அடிமை போல கெஞ்சி பெற வேண்டியதோ, ஒப்பந்தம் வழியாகப் பெற வேண்டியதோ அல்ல. மாறாக, கடவுள் மட்டுமே கொடுக்கவல்ல, தந்தையிடமிருந்து மகன் வழியாக மனுக்குலத்திற்குக் கொடுக்கப்படும் நிலையான வாழ்வு என்றும் கூறினார் திருத்தந்தை.
உலக மீட்பராகிய இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் ஆறுதலையும் நம்பிக்கையையும் இவ்வுலகிற்குக் கொண்டு வர அழைக்கப்படுகிறோம். அதிலும், குறிப்பாக சோர்வடைந்தவர்களுக்கும் ஏமாற்றமடைந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நிலைவாழ்வினை வாழ, இறப்பை ஏமாற்றுவதற்கு பதிலாக வாழ்வை நாம் போற்றவேண்டும். அதாவது, அனைத்தையும் பகிரும் வேளையில் உடன் இருப்பவர்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இறை இரக்கத்தின் அன்னை மரியா, இறைத்திருவுளத்தை ஏற்கும் நல் இதயம் கொண்டவர்களாக நாம் வாழ, நமக்கு உதவுவாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எப்போதும் அன்பையும் மீட்பையும் மட்டுமே விரும்ம்பும் மரியா அமைதியை உருவாக்குபவர்களாக நாம் மாற அருள் புரிவாராக என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்