வன்முறையை உரையாடலுக்கான தேடலால் மாற்ற முயல்வோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
அமைதி என்பது அனைத்து மக்களின் விருப்பம், மேலும் அது போரினால் துண்டாக்கப்பட்டவர்களின் வேதனையான அழுகை என்றும், இவர்களின் இந்நிலை அரசுப்பொறுப்பில் இருப்பவர்களின் இதயங்களைத் தொட்டு, ஆயுதங்களின் வன்முறையை உரையாடலுக்கான தேடலால் மாற்ற முடியும் என்று அவர்களின் மனதைத் தூண்டும்படி இறைவனிடம் கேட்போம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், கோடை விடுமுறைக்காக காஸ்தல் கந்தோல்போ செல்வது குறித்தும் மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தத் திருத்தந்தை அவர்கள், கோடைக்காலத்தின் அதிகமான வெப்பச் சூழலிலும் புனித கதவு வழியாக பெருங்கோவிலிற்குள் செல்லக் காத்திருக்கும் மக்களின் திருப்பயணம் துணிவு மிக்கது போற்றத்தக்கது என்றும் கூறினார்.
ஆங்கில மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குவாடலூப் நதி வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவினால், கோடைக்கால முகாமில் இருந்த தங்களது அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்