MAP

இறையரசுப்பணிக்குச் சான்று பகரும் சீடர்கள் தேவை

சூழலுக்கு ஏற்ப கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் எப்போதும் அதிகம். ஆனால், கடவுள் பணிக்காக எல்லா நாளும் பணியாற்றத் தயாராக இருப்பவர்கள் மிகக்குறைவு - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவைக்கும் உலகத்திற்கும் நம்பிக்கையை வெளிப்புற அடையாளமாகக் காட்டி தங்களது துறவறக் கடமைகளை நிறைவேற்றும் மக்கள் தேவையில்லை, மாறாக மறைப்பணியில் ஆர்வமுள்ளவர்களும், இறையரசுப்பணி மேல் அன்பு கொண்டு அதற்கு சான்று பகரும் சீடர்களுமே தேவை என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளைசெப உரையின் போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை 14-ஆம் லியோ  அவர்கள், அறுவடையோ மிகுதி வேலையாள்களோ குறைவு என்ற நற்செய்தி வாசகம் குறித்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் அவரவர் அழைப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப மறைப்பணியாற்ற கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், 72 சீடர்களை இருவர் இருவராக இயேசு நற்செய்தி அறிவிக்க அனுப்பினார் என்பது அவரது தாராள மனத்தையும், நற்செய்தியானது இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களுக்குமானது என்பதன் அடையாளமாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அகன்று விரிந்த கடவுளது இதயம் அவரது அறுவடைக்குத் தேவையான ஆள்கள் அதிகம் என்பதையும் எடுத்துரைக்கின்றது என்றும், அவரது பிள்ளைகளாகிய இவ்வுலக மக்கள் அனைவரும், அவரது அன்பினை நிறைவாகப் பெற்று மீட்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப செயல்படவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறையரசு தரையில் ஒரு விதை போல முளைக்கிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இக்கால பெண்களும் ஆண்களும், பல விடயங்களால் மூழ்கடிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், ஒரு பெரிய உண்மைக்காகக் காத்திருக்கிறார்கள், தங்கள் வாழ்க்கைக்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தேடுகிறார்கள், நீதியை விரும்புகிறார்கள், நிலையான வாழ்விற்கான ஏக்கத்தைத் தங்களுக்குள் சுமக்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடவுளால் விதைக்கப்பட்ட வயலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் இயேசுவின் கண்களால் அந்நிலம் நல்ல விளைச்சல் கொடுப்பதையும் அதை அறுவடை செய்ய செல்லும் தொழிலாளர்கள் மிகக்குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நம் வாழ்க்கையிலும் மனிதகுல வரலாற்றிலும் கடவுள் செய்ய விரும்பும் ஒரு பெரிய செயல் ஒன்று இருக்கிறது, ஆனால் அதைக் கவனிப்பவர்கள், அப்பரிசை வரவேற்று, அதை மக்களுக்கு அறிவித்துக் கொண்டு செல்பவர்கள் மிகக் குறைவு என்றும் மொழிந்தார்.

சூழலுக்கு ஏற்ப கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் எப்போதும் அதிகம். ஆனால், கடவுள் பணிக்காக எல்லா நாளும் பணியாற்றத் தயாராக இருப்பவர்கள் மிகக்குறைவு என்று தெரிவித்த திருத்தந்தை அவர்கள், நற்செய்தியின் விதையை தங்கள் இதயங்களில் வளர்ப்பவர்கள், அதை தங்கள் அன்றாட வாழ்க்கை, குடும்பம், பணியாற்றும் இடம், கல்வி பயிலும் இடம் மற்றும் பல்வேறு சமூக சூழல்களில் தேவைப்படுபவர்களிடமும் கொண்டு வருகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

மேய்ப்புப்பணியாற்ற ஏராளமான தத்துவக் கருத்துக்கள் நமக்குத் தேவையில்லை, மாறாக அப்பணியாற்ற நாம் இறைவனிடம் செபிப்பது அவசியம் என்றும், கடவுளோடு நாம் கொள்ளும் உறவு, அவருடனான உரையாடல் போன்றவற்றை வளர்க்கும்போது அவர் நம்மைத் தமது பணியாள்களாக்கி இறையரசின் சான்றுகளாக உலகம் என்னும் அறுவடைக் களத்திற்கு அனுப்புவார் என்றும் கூறினார் திருத்தந்தை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 ஜூலை 2025, 12:49

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >