MAP

உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க ஆயர் மாமன்ற உறுப்பினர்களுடன் திருத்தந்தை உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க ஆயர் மாமன்ற உறுப்பினர்களுடன் திருத்தந்தை  (ANSA)

உக்ரேனிய ஆயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

ஒவ்வொருநாளும் உடலளவிலும் மனதளவிலும் காயமடைந்துகொண்டிருக்கும் உக்ரேனிய மக்களின் நம்பிக்கையே, அழிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கான அடையாளம்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஜூலை 2, புதன்கிழமையன்று உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க ஆயர் மாமன்ற உறுப்பினர்களை சந்தித்த  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுளின் அனைத்து மக்களையும் நம்பிக்கையில் புதுப்பிக்க அழைக்கும் யூபிலி ஆண்டில் இச்சந்திப்பு நிகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் கூறுவதுபோல், எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்றும், ஏனெனில் அந்த நம்பிக்கை கிறிஸ்துவில் கடவுளுடைய அன்பின் மீது நிறுவப்பட்டுள்ளது என்றும் திருத்தந்தை 14ஆம் லியோ எடுத்துரைத்தார்.

மேலும், உக்ரேனிய மக்களின் தற்போதைய  சூழலில் நம்பிக்கையைப் பற்றி பேசுவதும், போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகளைக் கூறுவதும் எளிதான ஒன்றல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒவ்வொருநாளும் உடலளவிலும் மனதளவிலும் காயமடைந்துக் கொண்டிருக்கும் உக்ரேனிய மக்களின் நம்பிக்கையே,  அழிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது என்பதற்கான அடையாளம் என்றும் கூறினார் திருத்தந்தை.

உக்ரேனிய ஆயர் மாமன்ற உறுப்பினர்களாடும், அவர்கள் வழியாக உக்ரேனிய திருஅவையின்  அனைத்து விசுவாசிகளோடும் அருகிருப்பதாக தெரிவித்த திருத்தந்தை, ஒரே நம்பிக்கையிலும், எதிர்நோக்கிலும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும் கூறினார்.

அன்னை மரியா எப்போதும் நம்மோடிருந்து நமக்கு உதவுகிறார் என்றும், அமைதியாகிய ஆண்டவர் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்துகிறார் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, அன்னைமரியா அவர்களின் பரிந்துரையால் உக்ரைனில் அமைதி நிலவ இறைவேண்டல் செய்வதாகவும் கூறி, அவர்களுக்கு நன்றி  தெரிவித்து தனது ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூலை 2025, 16:33