கடவுளைச் சந்திப்பதற்கான நேரத்தை, இடத்தை வழங்குமிடம் திருப்பயணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது நம்பிக்கை வாழ்க்கையில் திருப்பயணம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்றும், ஏனெனில் அது நம் வீடுகளிலிருந்தும் அன்றாட பழக்க வழக்கங்களிலிருந்தும் நம்மை விடுவித்து, கடவுளை இன்னும் ஆழமாகச் சந்திப்பதற்கான நேரத்தையும் இடத்தையும் நமக்கு வழங்குகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூலை 5, சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், திருப்பயணிகளாக உரோமிற்கு, டென்மார்க், அயர்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
திருப்பயணங்கள் எப்போதும் நாம் வளர உதவுகின்றன, ஏனெனில் அவற்றின் வழியாக தூய ஆவியார் நம்மை இயேசு கிறிஸ்துவின் மனம் மற்றும் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாகப் பொருந்தச் செய்கிறார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பல்வேறு புனித தலங்களைப் பார்வையிடுவதன் வழியாக புனிதர்களும் மறைசாட்சிகளும் கிறிஸ்துவைப் பின்பற்றிய ஆழமான எடுத்துக்காட்டான வாழ்விலிருந்து நாம் ஊக்கத்தையும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்துடனும் பணியுடனும் படைத்துள்ளார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை, செவிசாய்த்தல், செபித்தல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தவும், இதன் வழியாக இதயத்தின் ஆழத்தில் நம்மை அழைக்கும் கடவுளின் குரலை இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் என்பதாகவும் எடுத்துரைத்தார்.
“கிறிஸ்துவில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்” என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், ஆசிரியர்கள் எப்போதும் குழந்தைகளை உருவாக்குவதில் தங்களது முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கின்றார்கள் வாழ்கின்றார்கள் என்பதை கவனிக்கும் மாணவர்கள் அவர்களை நம்பிக்கையின் மாதிரிகளாகக் கருதுவார்கள் என்றும், ஒவ்வொரு நாளும் தனது போதனைகளின் வாயிலாக எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவுடனான உறவை நாம் வளர்க்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்