திருத்தந்தையின் ஆகஸ்ட், செப்டம்பர் மாத திருப்பலி நிகழ்வுகள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் வருகின்ற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பிக்க உள்ள திருப்பலி நிகழ்வுகளை திருப்பீடம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 3, வியாழனன்று, திருத்தூதரான புனித தோமாவின் திருவிழாவன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆகஸ்ட் 3 ஞாயிறன்று உரோமில் உள்ள தோர் வெர்காதா என்னும் இடத்தில் காலை 9 மணியளவில் இளையோர் யூபிலிக்கான திருப்பலியை நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை.
ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை, அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலியினை காஸ்தல் கந்தோல்போவிலுள்ள வில்லானோவா புனித தோமா பாப்பிறை பங்குத் தளத்தில் காலை 10 மணியளவில் நிறைவேற்ற உள்ளார்.
செப்டம்பர் 7, ஞாயிறன்று, காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அருளாளர்களான - Pier Giorgio Frassati மற்றும் Carlo Acutis இருவருக்குமான புனிதர்பட்ட திருப்பலியினை நிறைவேற்ற உள்ளார் திருத்தந்தை.
செப்டம்பர் 14, ஞாயிறன்று, உரோமில் உள்ள புனித பவுல் பெருங்கோவிலில் மாலை 5 மணியளவில் நம்பிக்கையின் சான்றுகளாகத் திகழ்ந்த புதிய மறைசாட்சியாளர்களுக்கான நினைவுத்திருப்பலியினை நிறைவேற்றுவார்.
செப்டம்பர் 28, பொதுக்காலத்தின் 26-ஆம் ஞாயிறன்று, காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலியினை சிறப்பிக்க இருக்கின்றார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்