விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரினுடன் உரையாடிய திருத்தந்தை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கிய 56-வது ஆண்டு விழாவில், சந்திரனில் நடந்த இரண்டாவது மனிதரான விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரினுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உரையாடினார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இந்த உரையாடலின்போது, திருப்பாடல் 8 ஐ மேற்கோள் காட்டி, படைப்பின் சாதனை மற்றும் மறைபொருள் குறித்து இருவரும் சிந்தித்ததாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
அப்போது விண்வெளி வீரர் ஆல்ட்ரின், அவரது குடும்பத்தினர் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை திருத்தந்தை வழங்கினார் என்றும், அதன் பின்னர் ஆல்ட்ரின் சமூக ஊடகங்களில் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார் என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
அன்றைய நாளில் திருத்தந்தை லியோ அவர்கள், காஸ்தல் கந்தோல்போவில் உள்ள வத்திக்கான் ஆய்வகத்தையும் பார்வையிட்டார் என்றும், முதலில் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானுக்குத் திரும்புவதற்குப் பதிலாக செவ்வாய்க்கிழமை வரை அங்குத் தங்குவதை அவர் நீட்டித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
1969-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி, சந்திரனில் தரையிறங்குவதற்கான முதல் மனிதர் பயணமான அப்பல்லோ 11-ஐ நாசா அனுப்பியது. ஜூலை 20 -ஆம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் ஆனார், மேலும் விண்கலத்தில் இருந்த பஸ் ஆல்ட்ரின் இரண்டாவது நபரானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்