திருத்தந்தையைச் சந்தித்தார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு.அந்தோனியோ கோஸ்தா
மெரினா ராஜ் – வத்திக்கான்
உலகில் பசியை ஒழித்தல், ஏழை நாடுகளின் வளர்ச்சி, போரினால் பாதிக்கப்படும் மக்கள் வாழும் நாடுகளில் பன்னாட்டுச் சூழலை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் திரு. அந்தோனியோ கோஸ்தா அவர்களிடத்தில் கலந்துரையாடினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஜூன் 6, வெள்ளிக்கிழமை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான திரு அந்தோனியோ கோஸ்தா அவர்களை வத்திக்கானில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், உலகில் நிலவும் வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கான உலகளாவிய நிதியை நிறுவுவதற்கான திட்டம் குறித்தக் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும் மாநிலங்களுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் பேரருள்தந்தை Wachowski Mirosław Stanisław அவர்களையும் சந்தித்தார் திரு அந்தோனியோ கோஸ்தா.
திருப்பீடச் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது திருஅவைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான சுமூகமான நல்ல உறவுகள், உலகில் பசியை ஒழிப்பதற்கும் ஏழ்மையான நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு உலகளாவிய நிதியை நிறுவுவதற்கான திட்டம், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்த உரையாடலை மேலும் தீவிரப்படுத்துவதற்கான விருப்பம் ஆகியவை குறித்துக் கலந்துரையாடப்பட்டன.
மேலும் தற்போதைய பன்னாட்டுச் சூழல் குறித்தும், குறிப்பாக உக்ரைன் மற்றும் காசாவில் உள்ள மோதல்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பின் திரு அந்தோனியோ கோஸ்தா அவர்கள் தனது X வலைதளப்பதிவில், “உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு திருஅவை ஒரு முக்கியமான பங்காளராக இருக்கின்றது” என பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்