MAP

புதன் மறைக்கல்வி உரை - இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்

ஜூன் 25, புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும் என்ற பகுதி குறித்த கருத்துக்களை மறைக்கல்வி உரையாக வழங்கினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜூன் 25, புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும் என்ற பகுதி குறித்த கருத்துக்களை மறைக்கல்வி உரையாக வழங்கினார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வியில் இயேசுவின் வாழ்க்கை – உவமைகள் என்ற தலைப்பின் 11-ஆம் பகுதியாக இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும் என்ற தலைப்பில் மறைக்கல்வி உரைக்கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு வழங்க வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. உலகின் பல பகுதிகளிலிருந்து வந்து வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளைத் திறந்த வாகனத்தில் வலம்வந்தபடி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் மாற்கு நற்செய்தியில் உள்ள இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும் என்ற பகுதியின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மாற்கு 5: 33 - 36

இரத்தப் போக்குடைய அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு,  இயேசுமுன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார்.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

எதிர்நோக்கின் அடையாளமாக இருக்கும் இயேசுவின் குணப்படுத்துதல்களைப் பற்றி இன்றும் நாம் தொடர்ந்து சிந்திப்போம். ஒருவருடன் நட்புறவு கொள்ளும்போது நாம் அனுபவிக்கக்கூடிய ஆற்றலானது இயேசுவிடம் உள்ளது. வாழ்க்கையைக் மிகவும் கடினப்பட்டு வாழும் நிலையானது நமது காலத்தில் ஒரு பரவலான நோயாக இருக்கின்றது. எதார்த்தமான வாழ்வானது மிகவும் சிக்கலானதாகவும், கனமானதாகவும், எதிர்கொள்ள மிகவும் கடினமானதாகவும் நமக்குத் தெரிகிறது. எனவே நமக்குள் நாம் நம்மை மூடிக்கொண்டு, நாம் விழித்தெழுந்தால், வாழ்க்கை விடயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்ற மாயையின் கீழ் உறங்கிவிடுகின்றோம். இயேசுவுடன் சேர்ந்து நாம் வாழ்வை நன்றாக வாழ முடியும் என்ற எதார்த்தத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும். சில சமயங்களில் மற்றவர்களை முத்திரை குத்த விரும்புபவர்களின் தீர்ப்பால் நாம் தடுக்கப்பட்டதாக உணர்கிறோம்.

மாற்கு நற்செய்தி எடுத்துரைக்கும் இந்த இரண்டு நிகழ்வுகளில் இச்சூழல் பின்னிப் பிணைந்துள்ளதை நாம் காணமுடியும். ஒருவர் 12 வயதுடைய படுக்கையில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் சிறுமி. மற்றொருவர் இரத்தப்போக்கினால் 12 ஆண்டுகளாக வருந்தி குணமடைவதற்காக இயேசுவை தேடிச்செல்லும் பெண். இந்த இரண்டு பெண்களுக்கும் மத்தியில் நற்செய்தியாளர் மாற்கு சிறுமியின் தந்தையைப் பற்றி எடுத்துரைக்கின்றார். தொழுகைக்கூடத் தலைவரான யாயீர் என்னும் அந்த நபர், தனது மகளின் நோயைப்பற்றி வருந்தி புலம்பி வீட்டிலேயே இருக்கவில்லை. மாறாக, இயேசுவிடம் உதவி கேட்க அவரை நாடி வீட்டை விட்டு வெளியே வருகின்றார். தொழுகைக்கூடத் தலைவராக இருந்தாலும் தனது தகுதியை முன்னிறுத்தி எந்த கோரிக்கைகளையும் இயேசுவின் முன் வைக்கவில்லை. காத்திருக்க வேண்டிய சூழலில் பொறுமையை அவர் கைவிடவில்லை. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? என்று கூறியபோதும் கூட தொடர்ந்து தனது நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றார்.

இயேசுவுடனான இந்த தந்தையின் உரையாடல், இரத்தப்போக்குடைய பெண்ணால் குறுக்கிடப்படுகிறது, அவள் இயேசுவை அணுகி அவரது மேலாடையைத் தொடுகின்றார். அப்பெண் எடுத்த துணிச்சலான முடிவு அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. இயேசுவைச் சுற்றி இருந்த மக்கள் எல்லாரும் அப்பெண்ணை, தூரமாக நிற்கவும், மற்றவர் பார்வையில் இருந்து விலகி இருக்கவும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்த நிலையில், அவர் துணிச்சலுடன் இயேசுவின் ஆடையைத் தொடுகின்றார். தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் மறைத்துக்கொள்ளவும் பிறர் வலியுறுத்திய நிலையில் அனைவர் முன்பாக வந்து நிற்கும் துணிவு பெறுகின்றார் அப்பெண். இதுபோன்று நாமும் சில சமயங்களில் நம்முடையதல்லாத ஓர் ஆடையை உடுத்தவேண்டும் என்ற மற்றவர்களின் தீர்ப்புக்குப் பலியாகின்றோம். அவர்கள் நம் மீது முத்திரை குத்த முயற்சிக்கிறார்கள். இதனால் மிக மோசமாக உணரும் நாம் அதிலிருந்து வெளியேற முடியாது வருந்துகின்றோம்.

இயேசுவால் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை அப்பெண்ணுக்குள் துளிர்க்கும்போது, ​​அந்தப் பெண் மீட்பிற்கான பாதையில் இறங்குகிறாள். வெளியே சென்று அவரைத் தேடும் ஆற்றலைப் பெறுகின்றார். குறைந்தபட்சம் அவருடைய ஆடையின் விளிம்பையாவது தொட விரும்புகிறார்.

இயேசுவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருந்தது, பலர் அவரைத் தொட்டனர், ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. இந்தப் பெண் இயேசுவைத் தொடும்போது, ​​அவள் குணமடைந்தார். இங்கே வித்தியாசம் எங்கே உள்ளது? இந்த நற்செய்திப்பதிவைக் குறித்து புனித அகுஸ்தினார், “கூட்டம் என்னைச் சுற்றி நெருக்குகிறது, ஆனால் நம்பிக்கை என்னைத் தொடுகிறது” என்று கூறுகிறார். ஆம், நாம் இயேசுவை நோக்கி நம்பிக்கை செயலைச் செய்யும் ஒவ்வொரு முறையும், அவருடனான தொடர்பு நமக்கு ஏற்படுகின்றது. உடனடியாக அவருடைய அருள் அவரிடமிருந்து நம்மை நோக்கிப் பாய்கிறது. சில நேரங்களில் நாம் அதைக் கவனிக்காது இருந்தாலும், மறைமுகமான மற்றும் உண்மையான வழியில், அவரது அருள் நம்மை அடைந்து, மெதுவாக நம் வாழ்க்கையை உள்ளிருந்து மாற்றுகிறது.

இயேசுவின் குணமளிக்கும் ஆற்றலை முழுமையாகப் புரிந்துகொள்ளாத பலரும் கூட அவரை அணுகுகின்றனர். நாம் நமது ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆனால் நமது இதயமோ வெகுதொலைவில் உள்ளது. இரத்தப்போக்குடைய பெண் அமைதியானவராக பெயர் கூட தெரியாதவராக அடையாளம் காட்டப்படுகின்றார். இந்தப் பெண், தன் பயங்களை வென்று, தன் நோயால் அசுத்தம் என்றுக் கருதப்பட்ட தன் கைகளால் இயேசுவின் இதயத்தைத் தொடுகிறார். உடனடியாக அவர் குணமடைந்ததாக உணர்கிறார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” (மாற்கு 5:34) என்கிறார்.

இதற்கிடையில், தொழுகைக்கூடத் தலைவரின் பணியாளர்கள் சிறுமியின் தந்தையிடம் அவரது மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கொண்டு வருகிறார்கள். இயேசு தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறுகின்றார். அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றதும் அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் கண்ட இயேசு உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்கின்றார்.

சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்று கூற உடனே அச்சிறுமி எழுந்து நடக்கின்றார். இயேசுவின் இந்த செயலானது இயேசு நோய்களைக் குணமாக்குபவர் மட்டுமல்ல. மாறாக, இறப்பிலிருந்து உயிர்ப்பிக்க வல்லவர் என்பதை எடுத்துரைக்கின்றது. இறைவனுக்கு நிலைவாழ்வாகிய இறைவனுக்கு இறப்பு என்பது உடலின் உறக்கம் போன்றதே. ஆன்மாவின் மரணமே மட்டுமே உண்மையான மரணம். அதைக்குறித்தே நாம் அஞ்ச வேண்டும்.

சிறுமி உயிர்பெற்றெழுந்ததும் அவளுக்கு உணவு கொடுக்க பெற்றோர்களுக்கு இயேசு சொன்னார் என்று நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு நம் மனிதகுலத்துடன் கொண்டுள்ள நெருக்கத்தின் மற்றொரு உறுதியான அடையாளமாக இச்செயல் கருதப்படுகின்றது. இச்செயலின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு நம் குழந்தைகள் நெருக்கடியில் இருக்கும்போது ஆன்மிக ஊட்டச்சத்து தேவைப்படும்போது, ​​அதை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது என்று நமக்குத் தெரியுமா? நற்செய்தியால் நாமே நம்மை வளர்த்துக் கொள்ளாவிட்டால் அதை எப்படிச் செய்ய முடியும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, வாழ்க்கையில் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வின் தருணங்கள் பல உள்ளன, மேலும் இறப்பின் அனுபவமும் உள்ளது. அந்த இரத்தப் போக்குடைய பெண்ணிடமிருந்தும், சிறுமியின் தந்தையிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்வோம். இயேசுவிடம் செல்வோம். அவரே நம்மைக் குணப்படுத்த முடியும், அவர் நம்மை மீண்டும் பிறக்கச் செய்ய முடியும். அவர் நமது எதிர்நோக்கு.

இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவுசெய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.  உலக நாடுகளின் அமைதிக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார் இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது ஆசீரை அளித்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஜூன் 2025, 09:59

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >