MAP

குருமட மாணவர்களுடன் திருத்தந்தை குருமட மாணவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

பயிற்சி மாணவர்கள் நம்பிக்கையின் சான்றுகளாக உள்ளார்கள்

திருத்தந்தை 14ஆம் லியோ : கிறிஸ்துவுடனும் நம்மை நாடிவருவோருடனும் சந்திப்பை மேற்கொள்வதில் எவ்வித தடையையும் மேற்கொள்ளாமல் பாலங்களாகச் செயல்பட வேண்டியவர்கள் அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

குருத்துவப் பயிற்சிப் பெற்றுவரும் மாணவர்கள் தங்கள் செயல் திறன் வழி எதிர்நோக்கு என்னும் சுடரை அணையாமல் காத்து வருகிறார்கள் என்றார் திருத்தந்தை 14ஆம் லியோ.

அருள்பணித்துவ வாழ்வுக்கென தயாரித்துவரும் ஏறக்குறைய 4000 குருத்துவ மாணவர்களை யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், வெளியிடங்களுக்குச் சென்று பணிபுரியும் மறைபணித்திருஅவைமயின் சேவகர்களாகவும், மீட்கும் இறைவார்த்தையை அறிவிப்பவர்களாகவும் பயிற்சி பெறும் குருத்துவ மாணவர்கள் திருப்பயணிகளாக மட்டுமல்ல, நம்பிக்கையின் சான்றுகளாகச் செயல்படுகிறர்கள் என அவர்களிடம் உரைத்தார்.   

இறைவனின் அழைப்புக்கு தாழ்ச்சியுடனும் மனவுறுதியுடனும் குருத்துவ பயிற்சி மாணவர்கள், ‘ஆம்’ சொல்லும்போது திருஅவையின் வாழ்வுக்குள் முளைவிட்டு வளர உதவுகின்றார்கள் என்ற திருத்தந்தை, இயேசுவே முதலில் அவர்களை அழைத்து, அவருடனும் தங்கள் உடன் சகோதரர்களுடனும் நட்புணர்வு அனுபவத்தில் தொடர அழைப்புவிடுக்கிறார் என உரைத்தார்.  

மண்ணில் மடிந்து மிகுந்த பலன் கொடுக்கும் கோதுமை மணி குறித்த கருத்தை முன்வைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், கிறிஸ்துவுடனும் உங்களை நாடிவருவோருடனும் சந்திப்பை மேற்கொள்வதில் எவ்வித தடையையும் மேற்கொள்ளாமல் பாலங்களாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இயேசு கிறிஸ்து எவ்வாறு ஒரு மனித இதயம் கொண்டவராக அன்பு கூர்ந்தாரோ, அதேபோல் நாம் கிறிஸ்துவின் இதயத்தொடு அன்புகூர அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார் திருத்தந்தை.

நம் உள்மன வாழ்வுக்கு, அதாவது இதயத்திற்கு திரும்ப வேண்டும் என்ற புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இதயத்தின் உணர்வுகளே நம் வாழ்வின் பாதையைக் கண்டுகொள்ள உதவுகின்றன, அதன் வழியாகவே நாம் உண்மையுள்ளவர்களாக மாறுவதோடு, முகமுடி அணியா ஒரு நிலைக்கும் எடுத்துச்செல்லப்படுகிறோம் என கூறினார்.

அடிக்கடி தூய ஆவியாரை நம் துணைக்கு அழைப்பதையும், இயற்கை, கலை, கவிதை, இலக்கியம், இசை மற்றும்  மனித நேயத்திற்கு செவிமடுப்பதையும் கைவசம் கொள்ளுங்கள் என குருத்துவப்பயிற்சி மாணவர்களுக்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

இறையியல் படிப்பில் நீங்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தாலும், சமூகத்தொடர்பு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவை தரும் அண்மை சவால்கள் போன்ற கலாச்சார குரல்களுக்கு இதயங்களையும் மனதையும் திறந்தவர்களாகச் செயல்படுங்கள் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவைப்போல், மிகச்சிறியோர், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலுக்கு செவிமடுக்க ஒருநாளும் மறவாதீர்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.

வாழ்வில் தியானம், ஜெபம், மௌனம் ஆகியவைகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்து, நம் பாதை என்ன, கடவுள் நம்மை எதை நோக்கி வழி நடத்துகிறர் என்பதை உணர்ந்துகொள்ள இவை உதவும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 ஜூன் 2025, 15:15