MAP

கிறிஸ்தவத் தலைவர்களுடன் திருத்தந்தை கிறிஸ்தவத் தலைவர்களுடன் திருத்தந்தை  (ANSA)

கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் காரணங்கள் மிகப்பெரியவை

திருத்தந்தை : இந்த ஆண்டு அனைத்து கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிப்புப் பெருவிழாவைக் கொண்டாடியது மகிழ்ச்சி. உயிர்ப்பு பெருவிழாக் கொண்டாட்டம் இயேசுவை அறிவிக்கும் பணிக்கு புதிய ஆற்றலை அளிப்பதாக அமைகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் -வத்திக்கான்

நிசேயா  பொதுச்சங்கம்  வெறும் வரலாற்று நிகழ்வல்ல  அது அனைத்து கிறிஸ்தவர்களது முழுமையான ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்ல வழிகாட்டும் ஒரு திசைகாட்டி என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளார்.

ஜூன் 4  முதல் 7 வரை ,உரோமில் உள்ள புனித தாமஸ் அக்குவினாஸ் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற,  நிசேயா பொதுச்சங்கத்தின் 1700ஆம்  ஆண்டு நிறைவில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களை  சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

கி.பி 325ஆம் ஆண்டு பேரரசர் முதலாம்  கான்ஸ்டன்டைன்  அவர்களால் நிசேயா நகரில் கூட்டப்பட்ட பொதுச்சங்கத்தின்   1700வது ஆண்டு நிறைவைக் கத்தோலிக்கத் திருஅவை இந்த ஆண்டு நினைவு கூர்கிறது.

இந்தப் பொதுச்சங்கம்  திருஅவையின் தெய்வீகக் கோட்பாடுகளை ஒரே மாதிரியாக உருவாக்குவதற்கும், இயேசுவின் தெய்வீகத்தன்மையை உறுதி செய்வதற்கும், நிசேயா நம்பிக்கை அறிக்கையை உருவாக்குவதற்குமான முயற்சியாக அமைந்தது.

சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பங்கேற்பாளர்களை  உளமார வரவேற்று ,எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கருத்தரங்கிற்கு பாராட்டு தெரிவித்தத்துடன், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலிருந்து ஆரம்பமான கத்தோலிக்க மற்றும் கிழக்குத் திருஅவைகளின் இணைந்த பயணத்தில் ,நிசேயாவில் நடைபெற்ற இந்த முதல் பேரவையே அடித்தளமானது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை .

மேலும், நம்மைப் பிரிக்கும் காரணங்களை விட ஒன்றிணைக்கும் காரணங்கள் மிகவும் ஆழமானவை மற்றும் சிறந்தவை என்றும், நிசேயா  பொதுச்சங்கத்தை நம்முடைய பொதுவான மூலமாக எடுத்துக்கொண்டு நாம் இன்னும் விலகி நிற்கும் புள்ளிகளை வேறு கோணத்தில் காண முடியும் என்றும், உரையாடல் மற்றும் கடவுளின் உதவியால் கிறிஸ்தவர்களை இணைக்கும் ஆழமான உண்மையை உணர முடியும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

நிசேயா பொதுச்சங்கம்  உலக அளவில் திருஅவை எவ்வாறு கோட்பாட்டுக் கேள்விகளைக்  கையாள வேண்டுமென நிர்ணயித்தலுக்கான தொடக்கமாக அமைந்தது என்றும்  கூறியுள்ளார் திருத்தந்தை.

நிசேயா பேரவையின் 1700ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தயாரிக்கும் இந்நிகழ்வு ,கிறிஸ்துவில் நம்முடைய நம்பிக்கையை மேலும் ஆழமாக உணரவும், பல மரபுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களின்  ஒருமித்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தவும் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருக்கட்டும் எனவும்  திருத்தந்தை  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிசேயா  பேரவையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று,  உயிர்ப்புப் பெருவிழாவை  ஒரே நாளில் கொண்டாடும் பொதுவான தேதியை நிர்ணயிப்பதே. ஆனால் இன்று பல திருஅவைகள்  இந்த மிக முக்கியமான திருவிழாவை  ஒரே நாளில் கொண்டாட இயலாத  நிலையில் இருக்கின்றன என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு அனைத்து கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிப்புப் பெருவிழாவைக் கொண்டாடியதில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த திருத்தந்தை, ,உயிர்ப்பு பெருவிழாக் கொண்டாட்டம் ஒரு சாட்சியாக இருக்க வேண்டியது மட்டுமல்ல ,இயேசுவை அறிவிக்கும் பணிக்கு புதிய ஆற்றலை அளிப்பதாக அமையவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஜூன் 2025, 16:01