தமஸ்கஸ் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை இரங்கல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜூன் 22, ஞாயிறன்று, சிரியாவின் தமஸ்கஸில் உள்ள தூய எலியா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவிலில் நிகழ்ந்த வழிபாட்டின்போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20 பேர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இரங்கல் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையின் பெயரில் இந்த இரங்கல் செய்தியை வழங்கியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இந்தத் துயரச் சம்பவத்தால் தான் மிகவும் வருத்தமடைந்ததாக திருத்தந்தை கூறியுள்ளதையும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தத் துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் தான் மிகவும் ஒன்றித்திருப்பதாகவும், அவர்கள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.
இந்தக் கொடுந்துயர் சம்பவத்தில் இறந்த அனைவரும் இறைபதம் அடையவும், காயமடைந்தவர்கள் நலம்பெறவும், சிரியாவில் அமைதி நிலவிடவும் தான் செபிப்பதாக திருத்தந்தை கூறியுள்ளதையும் இவ்விரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.
ஜூன் 22, ஞாயிறன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 20 பேர் கொல்லப்பட்டதுடன் 52 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்