திருத்தந்தை : இயேசுவைக் கொடுப்பது என்பது அன்பைக் கொடுப்பதாகும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருப்பீடப் பணியாளர்களுக்கான யூபிலிக் கொண்டாட்டம் ஜூன் 9ஆம் தேதி திங்களன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்று பல்வேறு நாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் திருப்பீடப் பிரதிநிதிகளாகச் செயல்படும் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்று வழங்கினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத அளவுக்கு பரந்த அளவில் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் திருப்பீடம் பல்வேறு நாடுகளிலும் பன்னாட்டு அமைப்புகளிடமும் தன் பிரதிநிதித்துவம் வழியாக மனிதகுல சகோதரத்துவ உணர்வுக்கும், மக்களிடையே அமைதிக்கும் உழைத்துவருகிறது என்றார் திருத்தந்தை.
தன்னுடைய அன்றாட அலுவல்களில் உதவும் அனைவருக்கும் தான் நன்றியுள்ளவனாக இருப்பதாக உரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், ஒரு நாட்டு திருஅவையின் உண்மை நிலைகள் குறித்து இப்பிரதிநிதிகள் திரட்டிக் கொடுக்கும் தகவல்கள் வழியாகவே அறிய முடிகிறது என்றார்.
திருத்தூதர் பணி நூலின் 3ஆம் பிரிவின் துவக்கத்தில் எடுத்துரைக்கப்படும், கால் ஊனமுற்றவரை புனிதர்கள் பேதுருவும் யோவானும் உற்று நோக்கி அவருக்கு குணமளித்த நிகழ்வைக் குறித்து திருப்பீடப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, நம்பிக்கையற்றிருந்த மனிதரை உற்று நோக்கி குணமளித்த திருத்தூதர்களின் செயல் நம்மையும் கடினமான பகுதிகளில் உறவைக் கட்டியெழுப்பவும், பாலங்களை அமைக்கவும் அழைப்புவிடுக்கிறது என மேலும் தெரிவித்தார்.
கால் ஊனமுற்ற மனிதரை நோக்கி பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” எனக் கூறியது, இயேசுவைக் கொடுப்பது என்பது அன்பைக் கொடுப்பதாகும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது என்றார் திருத்தந்தை 14ஆம் லியோ.
அன்போடு அனைத்தையும் ஆற்றவும், ஏழைகள் பக்கம் இருக்கவும், போர், வன்முறை மற்றும் அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கவும் திருப்பீடப் பிரதிநிதிகளுக்கு ஊக்கமளித்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்