MAP

இத்தாலிய ஆயர்களுடன் திருத்தந்தை இத்தாலிய ஆயர்களுடன் திருத்தந்தை  (@Vatican Media)

திருத்தந்தைக்கும் ஆயர் பேரவைகளுக்கும் இடையே நிலவும் தோழமை

திருத்தந்தை : மக்களிடையே மதம்சாரா தன்மை, விசுவாசத்தில் அதிருப்தி போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, இவை இயல்பானவை என்றோ, இவை மேற்கொள்ளமுடியாதவை என்றோ ஒரு மனநிலைக்கு திருஅவை வந்துவிடக் கூடாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலிய ஆயர் பேரவை அங்கத்தினர்களை ஜூன் 17, செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து இத்தாலிய ஆயர்களுடன் திருத்தந்தைக்குரிய தனிப்பட்ட உறவுகள் குறித்து எடுத்துரைத்ததுடன், இத்தாலிய கத்தோலிக்க சமூகம் சந்தித்துவரும் பல்வேறு சவால்கள் குறித்து உரையாடினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

முன்னாள் திருத்தந்தையர்கள் புனித ஆறாம் பவுல், 16ஆம் பெனடிக்ட், பிரான்சிஸ் ஆகியோர் இத்தாலிய திருஅவை குறித்துப் பேசியதையும், திருத்தந்தைக்கும் ஆயர் பேரவைகளுக்கும் இடையே நிலவ வேண்டிய தோழமை குறித்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைத்துள்ளவைகளையும் மேற்கோள்காட்டிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், இத்தாலிய மக்களிடையே மதம்சாரா தன்மை, விசுவாசத்தில் அதிருப்தி, மக்கள்தொகை பிரச்சனை போன்ற சவால்களையும் முன்வைத்தார்.

இத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, இவை இயல்பானவை என்றோ, இவை மேற்கொள்ளமுடியாதவை என்றோ ஒரு மனநிலைக்கு திருஅவை ஒரு நாளும் வந்துவிடக் கூடாது என்ற திருத்தந்தை, சில தீர்வுகளையும் இதற்கு முன்வைத்தார்.  

விசுவாசத்தை எடுத்துரைப்பதில் ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதல் தேவைப்படுகிறது, அதற்கு இயேசுவை நடுநிலையாக வைத்து, நற்செய்தியின் மகிழ்வைக் கண்டுகொள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற முதல் பரிந்துரையை முன்வைத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இயேசுவுடனான நம் உறவு நம் மறைப்பணிகளில் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அழைப்பு விடுக்கிறது என்ற திருத்தந்தை, தினசரி வாழ்வின் இடங்களில் நாம் அமைதியின் கருவிகளாகச் செயல்பட்டு, ஒப்புரவின் செயல்பாட்டாளர்களாக வெளிப்படையாக விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வன்முறையற்ற வழிகளின் கல்வியைப் போதிப்பதில் ஒவ்வொரு மறைமாவட்டமும் உதவுவதன் வழி விரோத மனப்பான்மைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் பெறுவதுடன் நீதி நடைமுறைப்படுத்தப்பட்டு, மன்னிப்பு அனுபவிக்கப்படும் என மேலும் கூறினார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், தரவு பொருளாதாரம் போன்றவைகளால் மனித மாண்பு பாதிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், செவிமடுக்கும் இடத்திலேயே ஒன்றிப்பு பிறக்கும் எனவும், ஒன்றிப்பு இருக்கும் இடத்திலேயே உண்மை என்பது நம்பத்தகுந்ததாக மாறும் எனவும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியை எடுத்துரைத்தல், அமைதி, மனித மாண்பு, கலந்துரையாடல் ஆகியவைகளின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

வாழ்வின் துணிவுள்ள தேர்வுகள் குறித்து ஒருநாளும் அச்சம் கொள்ள வேண்டாம் என்ற அழைப்பையும் இத்தாலிய ஆயர்களிடம் விடுத்தார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜூன் 2025, 14:04