MAP

காஸ்தல் கந்தோல்போ மலைப்பகுதி காஸ்தல் கந்தோல்போ மலைப்பகுதி 

காஸ்தல் கந்தோல்போவில் கோடை விடுமுறையைக் கழிக்கவிருக்கும் திருத்தந்தை!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை மாதத்தின் பாதியையும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வார இறுதியையும் உரோமைக்கு அருகே உள்ள காஸ்தல் கந்தோல்போவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்தில் கழிப்பார் என்று பாப்பிறை இல்லத்தின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் திருத்தந்தையர் தங்கள் கோடைவிடுமுறையை கழிக்கும் பாரம்பரிய பழக்கத்தை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கடைபிடிக்க உள்ளதாக வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

ஜூன் 17, இச்செவ்வாயன்று, இத்தகவலை வழங்கிய பாப்பிறை இல்லத்தின் அறிக்கை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்,  காஸ்தல் கந்தோல்போவிலுள்ள கோடை விடுமுறை இல்லத்தில் தனது விடுமுறை நாள்களை இரண்டு கட்டமாக செலவிடுவார் என்றும் கூறியுள்ளது.

திருத்தந்தையின் நிகழ்வுகள்

ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஓய்வுக்காக காஸ்தல் கந்தோல்போவின் பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்திற்குப் பயணம் செய்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணிக்கு, காஸ்தல் கந்தோல்போவில் உள்ள வில்லனோவாவின் புனித தோமை பாப்பிறை பங்குத் தளத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், மதியம் 12:00 மணிக்கு அப்போஸ்தலிக்க இல்லத்திற்கு முன்னால் உள்ள லிபெர்ட்டி சதுக்கத்தில் நண்பகல் மூவேளை செபவுரையை வழங்குவார் என்றும் உரைக்கிறது அதன் அறிக்கை.

ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை, காலை 9:30 மணிக்கு, அல்பானோ பெருங்கோவிலில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், நண்பகலில், காஸ்தல் கந்தோல்போவில் உள்ள லிபர்ட்டி சதுக்கத்தில் மீண்டும் மூவேளை செபவுரையை வழங்குவார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அன்று பிற்பகல், திருத்தந்தை வத்திக்கானுக்குத் திரும்புவார் என்றும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் காஸ்தல் கந்தோல்போவுக்குத் திரும்பும் வரை அவர் அங்கேயே இருப்பார் என்றும் எடுத்துக்காட்டும் அதன் அறிக்கை,  வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை இளையோர் விழா நடைபெற உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஜூலை மாதத்தில், திருத்தந்தையின் அனைத்துத் தனிப்பட்ட சந்திப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், அதேபோல் ஜூலை 2, 9, 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இடம்பெறவேண்டிய திருத்தந்தையின் பொது மறைக்கல்வி உரைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டும் அதன் அறிக்கை, இப்புதன் பொதுமறைக்கல்வி உரை ஜூலை 30 அன்று மீண்டும் தொடங்கும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை, காலை 10:00 மணிக்கு, திருத்தந்தை காஸ்தல் கந்தோல்போவிலுள்ள புனித தோமை பாப்பிறை பங்குத் தளத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும், அதனைத் தொடர்ந்து லிபர்ட்டி சதுக்கத்தில் நண்பகல் மூவேளை செபவுரையை வழங்குவார் என்றும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.

ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் லிபர்ட்டி சதுக்கத்தில் மீண்டும் நண்பகல் மூவேளை செபவுரை வழங்கும் திருத்தந்தை, அன்று பிற்பகலில், காஸ்தல் கந்தோல்போவிலிருந்து புறப்பட்டு வத்திக்கானுக்குத் திரும்புவார் என்றும் கூறுகிறது பாப்பிறை இல்லத்தின் அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 ஜூன் 2025, 12:19