கடவுளின் வார்த்தையும், அருளடையாளங்களும் வற்றாத ஆதாரங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
“கடவுளின் வார்த்தையும், அருளடையாளங்களும் வற்றாத ஆதாரங்கள் என்றும், அவற்றிலிருந்து நமது ஆன்மிக வாழ்க்கைக்கும், மேய்ப்புப் பணிக்கும் எப்போதும் புதிய ஊட்டத்தைப் பெறமுடியும்” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 25, புதன்கிழமை, இத்தாலியின் திரிவெனெத்தோ மறைமாவட்டங்களின் அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களை யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, புனித அகுஸ்தினாரின் வாழ்வியல் நெறிமுறைகள் பலவற்றை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
முன்னதாக அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்ற திருத்தந்தை, கிறிஸ்தவப் பாரம்பரியத்தை, குறிப்பாக அக்குயிலே மற்றும் குரோமத்தியுஸ், ஜெரோம் போன்ற புனிதர்கள் மற்றும் அருளாளர்கள் துல்லியோ மருஸ்ஸோ போன்ற மறைப்பணியாளர்களின் பாரம்பரியத்தை அவர்களுக்கு விளக்கினார்.
மேலும் குருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் இந்தப் பாரம்பரியத்தை அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களை ஊக்குவித்த திருத்தந்தை, அருள்பணித்துவ வாழ்க்கைக்கான பாதைக்கு நிலையான, பொறுமையான முயற்சித் தேவை என்பதை அவர்களுக்கு நினைவூட்டியதுடன், அருளாளர் திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் வாழ்வை மேற்கோள் காட்டி, யாக்கோபின் தேவதூதர்களைப் போலவே (காண்க. தொநூ 28:12) முன்னேற்றமும் படிப்படியாக நிகழ்கிறது என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
புனித அகுஸ்தினாரின் மனமாற்றத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டி, தன்னம்பிக்கையை விட கடவுள் மீதான நம்பிக்கை முக்கியம் என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, குறிப்பாக, சிரமம் அல்லது பாவத்தின் தருணங்களில், அருள்பணித்துவப் பயிற்சியில் இருக்கும் மாணவர்கள் தங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆன்மிக வலிமையின் தொடர்ச்சியான ஆதாரங்களாக கடவுளின் வார்த்தையையும் அருளடையாளங்களையும் நம்புங்கள் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களாக அல்ல, மாறாக சகோதரத்துவத்திலும், பயிற்சியாளர்கள் மீதான நம்பிக்கையிலும் ஒன்றிப்பில் பயிற்சி உருவாக்கத்தைத் தழுவுங்கள் என்றும் அருள்பணித்துவப் பயிற்சி பெறும் மாணவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இம்மாணவர்களின் பயிற்சிப் பயணத்தில் சான்று பகர்பவர்களாகவும் தோழர்களாகவும் இருங்கள் என்று பயிற்சி அளிப்போருக்கும் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் மீது உங்கள் பார்வையைப் பதிய வைத்து, அவருடன் ஒரு ஆழமான நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அருள்பணியாளர் இராபர்ட் ஹக் பென்சன் அவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியை மேற்கோள் காட்டி, இயேசு நம் ஒவ்வொருவருடனும் நட்பை நாடுகிறார் என்றும், இந்த எதிர்கொள்ளல் நமது வாழ்க்கையை மாற்றுகிறது மற்றும் நற்செய்திப் பணிக்கு ஊட்டமளிக்கிறது என்றும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்