MAP

புதன் மறைக்கல்வி உரை - திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை

விதைப்பவர் உவமை, நல்ல சமாரியர் உவமை பற்றிய கருத்துக்களைக் கடந்த வாரங்களில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள் ஜூன் 4 புதன்கிழமை அதன் தொடர்ச்சியாக திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை பற்றியக் கருத்துக்களை திருப்பயணிகளிடம் எடுத்துரைத்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவே நமது எதிர்நோக்கு என்ற மறைக்கல்வி தொடரின் இரண்டாம் தலைப்பாக இயேசுவின் வாழ்க்கை குறித்தக் கருத்துக்களை எடுத்துரைத்து வரும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், இயேசுவின் உவமைகள் பற்றி கடந்த வாரங்களில் பகிர்ந்துகொண்டார். விதைப்பவர் உவமை, நல்ல சமாரியர் உவமை பற்றிய கருத்துக்களைக் கடந்த வாரங்களில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள் இன்று அதன் தொடர்ச்சியாக திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை பற்றியக் கருத்துக்களை திருப்பயணிகளிடம் எடுத்துரைத்தார்.

ஜூன் 4, மாதத்தின் முதல் புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு திராட்சைத்தோட்ட வேலையாள்கள் உவமை குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ. உலகெங்கும் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் திறந்த காரில் வலம் வந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சிறுகுழந்தைகள் மேல் தன் கரங்களை வைத்து ஆசீர் அளித்தார். புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினை ஆரம்பித்தார். அதன்பின் மத்தேயு நற்செய்தியில் உள்ள திராட்சைத்தோட்ட வேலையாள்கள் உவமை என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள்  பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை

மத்தேயு 20:1-7

“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார்.  

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

நமது எதிர்நோக்கை வளர்த்தெடுக்கும் இயேசுவின் உவமைகளில் ஒன்றைக் குறித்து இன்று நாம் சிந்திப்போம். நமது வாழ்விற்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாத தருணங்களை நாம் சில நேரங்களில் உணர்கின்றோம். சந்தைகளில்  தங்களை யாராவது வேலைக்கு அமர்த்துவார்கள் என்று அமர்ந்திருக்கும் வேலையாள்களைப் போல, நாம் பயனற்றவர்களாகவும், நிறைவற்றவர்களாகவும் இருப்பதாக சில நேரங்களில் உணர்கிறோம். கடந்து செல்லும் காலம் மற்றும் நகர்ந்து செல்லும் வாழ்க்கையில் நாம் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவோ சில நேரங்களில் உணராது இருக்கின்றோம். ஒருவேளை நாம் சரியான நேரத்தில் வரவில்லை அல்லது மற்றவர்கள் நமக்கு முன்பாக வந்து விட்டனர் அல்லது நம்முடைய பிற கவலைகள் நம்மை இவ்வாறு எண்ணத் தோன்றுகின்றன.

சந்தைவெளி என்னும் உருவகம் நம் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் சந்தை வெளி என்பது வணிக இடம். இவ்விடத்தில் அன்பும் மாண்பும் ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கான முயற்சியில் வாங்கப்பட்டு விற்கப்படுகின்றன. மேலும் நாம் ஏற்றுகொள்ளப்பட்டதாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்டதாகவோ உணராதபோது, ​​அதிக விலைக்கு முதலில் ஏலம் எடுப்பவருக்கு நம்மை விற்கும் அபாயத்தையும் நாம் சந்திக்கிறோம். ஆனால் அச்சூழலிலும், நம் வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை இறைவன் நமக்கு நினைவூட்டுகிறார், ஏனெனில் இதை நாம் கண்டறிய உதவுவதே அவரது விருப்பமாக இருக்கின்றது.

இன்று நாம் வாசிக்கக்கேட்ட உவமையில், யாராவது தங்களை வேலைக்கு அமர்த்துவார்கள் என்று காத்திருக்கும் வேலையாள்களை நாம் காண்கின்றோம். மத்தேயு நற்செய்தியின் 20 ஆம் அதிகாரத்தில் அசாதாரணமான முறையில் நடந்து கொள்ளும் ஒரு நபரை நாம் காண்கிறோம், இவரது செயல் நம்மில் வியப்பையும் கேள்விகளையும் எழுப்புகிறது. அவரே திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர், நிலக்கிழார். அவர் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களைத் தேடி நேரில் செல்கிறார் என்பதன் வழியாக அவர் வேலையாள்களுடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்த விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.

நான் ஏற்கனவே கூறியது போல இது எதிர்நோக்கைத் தரும் ஓர் உவமை, ஏனென்றால் இந்த நிலக்கிழார் தனது நாளில் பலமுறை தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கக் வேலைக்காகக் காத்திருப்பவர்களைத் தேடி வெளியே செல்கிறார் என்று விவிலியம் நமக்கு எடுத்துரைகின்றது. தனது வேலையாள்களை வேலைக்கு அமர்த்த  விடியற்காலையில் வெளியே சென்ற நிலக்கிழார் பின்னர், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறையாக (9, 12, 3, 5) தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாள்களை அனுப்புவதற்காக அவர்களை தேடி வெளியே செல்கின்றார். பிற்பகல் மூன்று மணிக்கு வெளியே சென்ற பிறகு, மீண்டும் வெளியே செல்ல எந்த காரணமும் இருக்காது, ஏனெனில் ஒரு நாள் வேலையானது மாலை ஆறு மணியுடன் முடிவிற்கு வரும்.

ஆனால் இந்த நிலக்கிழார் சோர்வடையாதவராக மாலை 5 மணிக்கும் வெளியே சென்று வேலையாள்களை வேலைக்கு அமர்த்துகின்றார். ஏனென்றால் ஒவ்வொருவரின் உயிருக்கும் வாழ்விற்கும் மதிப்பு கொடுக்க விரும்புபவராக அவர் இருக்கின்றார். நாள்முழுதும் சந்தைவெளியில் வேலைக்காகக் காத்துக்கொண்டிருந்த வேலையாள்கள், யாரும் தங்களை வேலைக்கு அமர்த்தாததால் தங்களது எதிர்நோக்கினை ஏறக்குறைய இழந்தவர்களாகவே இருக்கின்றனர். இந்த நாள் இப்படி வீணாகிவிட்டதே என்ற ஏமாற்றத்தில் சிலரும், இன்னும் யாராவது வந்து தங்களை வேலைக்கு அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் சிலரும் அங்கு இருக்கின்றனர். வேலைநாளின் கடைசி ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதனால் பயன் என்ன? ஒரு மணி நேரம் மட்டும் வேலைக்குச் செல்வதனால் பயன் என்ன? எதுஎப்படி இருந்தாலும் வாழ்க்கையில் நாம் சிறிதளவே செய்ய முடியும் என்று தோன்றினாலும், அது எப்போதும் மதிப்புக்குரியதாகக் கருதப்படுகின்றது. வாழ்வின் அர்த்தத்தைக் கண்டறியும் வாய்ப்பு எப்போதும் உண்டு. ஏனெனில் கடவுள் நம் வாழ்க்கையை அன்பு செய்கின்றார்.

எனவே இந்த நிலக்கிழாரின் உண்மையான குணம் நாளின் முடிவில், கூலி வழங்கும் நேரத்தில் வெளிப்படுகிறது. விடியற்காலையில் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லும் முதல் வேலையாள்களுடன் நிலக்கிழார் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என ஒப்புக்கொண்டார், இது ஒரு நாள் வேலைக்கான சராசரியான கூலியாகும். மற்றவர்களுக்கு, நேர்மையானதைத் தருவதாகக் கூறுகிறார். எது நேர்மை? என்பதை அறிந்துகொள்ள இவ்வுவமையானது நமக்கு அழைப்புவிடுக்கின்றது. திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளருக்கு அதாவது, கடவுளுக்கு, இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் வாழத் தேவையானது அவர்களிடத்தில் இருக்க வேண்டும் என்பது நேர்மையானது. அவர் வேலையாள்களைத் தானே சென்று அழைத்தார், அவர்களின் மாண்பை அவர் அறிந்துள்ளார், அதற்கேற்ப அவர்களுக்கு கூலி கொடுக்க விரும்புகிறார். எனவே அவர் அனைவருக்கும் ஒரு தெனாரியம் வீதம் கூலி கொடுக்கிறார்.

முதலில் வந்த வேலையாள்கள் இக்கூலியைக் கண்டு ஏமாற்றமடைகிறார்கள் என்று உவமை எடுத்துரைக்கின்றது. நிலக்கிழாரின் செயலில் வெளிப்படும் நியாயத்தின் அழகை அவர்களால் பார்க்க இயலவில்லை. அது அநீதி அல்ல, ஆனால் தாராள குணமானது,  மனிதர்களின் தகுதியை மட்டுமல்லாது அவர்களின் தேவையையும் பார்க்கிறது இந்த தாராள குணம். கடவுள் மக்கள் அனைவருக்கும் தனது இறையரசைக் கொடுக்க விரும்புகின்றார். அதாவது, ஒரு முழுமையான, நிலையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்க விரும்புகிறார். இயேசுவும் நமக்கு அவ்வாறே செய்கிறார். அவருக்காகத் தங்கள் இதயங்களைத் திறப்பவர்களுக்குத் தன்னையே அவர் முழுமையாகக் கொடுக்கிறார்.

இந்த உவமையின் ஒளியில், இக்காலக் கிறிஸ்தவர்கள், “ஏன் உடனடியாக வேலை செய்யத் தொடங்க வேண்டும்? கூலி ஒரே மாதிரியாக இருந்தால், ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?” என்று சிந்திக்கத் தூண்டப்படலாம். புனித அகுஸ்தீன் இந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கின்றார். “நமக்கான வெகுமதி நிச்சயம் ஒரு நாள் உண்டு ஆனால் அது எந்த நாள் என்று அறியாத நிலையில், நம்மை அழைப்பவரைப் பின்பற்றுவதில் நாம் ஏன் தாமதிக்க வேண்டும்? அவர் தனது வாக்குறுதியின்படி நமக்குத் தருவார் என்பதை தாமதத்தின் காரணமாக, இழக்காமல் நீங்கள் கவனமாக இருங்கள்" என்று கூறுகின்றார்.

குறிப்பாக இளைஞர்கள் காத்திருக்காது, அவரது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய நம்மை அழைக்கும் கடவுளுக்கு உற்சாகமாக பதிலளிப்பவர்களாக இருக்க வேண்டும். அதைத் தள்ளிப் போடாது நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்வோம். ஏனென்றால் கடவுள் தாராளமானவர், நாம் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டோம். அவரது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதன் வழியாக, நமது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்று நமக்குள் நாம் சுமந்து செல்லும் ஆழமான கேள்விக்கான ஒரு பதிலைக் காண்கின்றோம்.

இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்ததும் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பெந்தகோஸ்து பெருவிழாவிற்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் தூய ஆவியின் செயலுக்கு நாம் பணிவுள்ளவர்களாக இருக்கவும், அவருடைய ஒளியையும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ள அவரிடம் அருள்வேண்டவும் வலியுறுத்தினார். 

இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 ஜூன் 2025, 10:59

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >