திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - உடல் நலமற்றவர் நலமடைதல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜூன் 18, புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு “உடல் நலமற்றவர் நலமடைதல்” என்னும் தலைப்பின்கீழ் பொதுமறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களை வாழ்த்திய திருத்தந்தை சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தினை துவக்கினார் அதன்பின் யோவான் நற்செய்தியில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
யோவான் 5: 2-9
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில், ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.] முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் உடல் நலமற்றவர் என்ற தலைப்பின் கீழ் தனது பொதுமறைக்கல்வி உரைக் கருத்துக்களைத்திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்டார்.
திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கருத்துக்கள் இதோ,
அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் குணப்படுத்துதல் குறித்து இன்றைய வாரத்திலும் தொடர்ந்து நாம் சிந்திப்போம். குறிப்பாக முடக்கப்படுதல், ஒரு சூழலுக்குள் சிக்கிக்கொள்ளுதல் பற்றி இன்று நாம் காணலாம். ஏனெனில் அத்தகைய முடக்கப்பட்ட நேரங்களில் நமக்கு எதிர்நோக்குடன் இருப்பது என்பது அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது. தொடர்ந்து போரிட விரும்பாமல் விட்டுக்கொடுத்து செல்லும் நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையில் இருக்கும் ஒரு மனிதராக யோவான் நற்செய்தியானது “உடல் நலமற்ற மனிதர் நலமடைதல்” பகுதிகளை விவரிக்கின்றது.
இயேசு யூதர்களின் திருவிழாவில் பங்கேற்பதற்காக எருசலேமுக்குச் செல்கின்றார். நேரடியாக ஆலயத்திற்குள் செல்லாமல் ஆடுகளைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்தி அதன்பின் காணிக்கையாக்கும் இடத்திற்கு வந்து அதன் வாயிலருகில் நிற்கின்றார். இந்த ஆட்டுவாயிலின் அருகே தீட்டானவர்கள் தூய்மையற்றவர்கள் என்று கருதப்பட்ட, கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நோயாளிகள் இருந்தனர். இயேசு அவர்களின் துன்பத்தின் பாதையில் அவர்களைச் சந்திக்கின்றார். இம்மக்கள் தங்களது வாழ்க்கை விதியை மாற்றக்கூடிய ஓர் அதிசயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். வாயிலின் அருகே இருந்த குளத்தில் இருந்த நீரானது அதிசய நீராக, குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட நீராகக் கருதப்பட்டது. அந்த நீர் கலங்கும்போது யார் முதலில் இறங்குகின்றார்களோ அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தது.
இது ஒரு வகையான "போரை ஏழைகளுக்குள்" உருவாக்கியது. இந்த நோயாளிகள் குளத்திற்குள் நுழைய சிரமப்பட்டு தங்களது உடலை இழுத்துச் செல்லும் சோகமான காட்சியை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பெத்சதா அதாவது இரக்கத்தின் இல்லம் என்று அழைக்கப்பட்ட அக்குளமானது, நோயாளிகளையும் ஏழைகளையும் சந்தித்து குணப்படுத்தி, அவர்களுக்கு எதிர்நோக்கைக் கொடையாக அளிக்கின்ற இறைவன் வாழும் திருஅவையின் உருவகமாகக் கூட இருக்கலாம்.
முப்பத்தெட்டு ஆண்டுகளாக உடல்நலமற்று பாதிக்கப்பட்ட ஒரு மனிதரிடம் இயேசு பேசுகிறார். தண்ணீர் கலங்கும்போது அவரைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லாமல் போனதால் பல ஆண்டுகளாக அவர் அங்கேயே இருக்க நேரிடுகின்றது. இத்தகைய அவரின் நிலையை இயேசு உணர்கின்றார். உண்மையில், பல நேரங்களில் நமது ஏமாற்றமானது நம்மை உடல்நலமற்றவர்களாக மாற்றிவிடுகின்றது. உற்சாகமற்றவர்களாக சோர்வடைந்து சோம்பலில் விழும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது.
“இயேசு அம்மனிதரை நோக்கி நீர் நலமடைய விரும்புகின்றீரா” என்று கேட்கின்றார். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் முடக்கப்பட்டு கிடந்த அவருக்கு நலமடைய வேண்டுமா என்ற இயேசுவின் இக்கேள்வியானது மிகவும் அவசியமானதுதான். பல நேரங்களில் நாமும் உடல் நலமற்றவர்களாகிய நம்மைப் பிறர் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தி அந்நிலையிலேயே இருக்க விரும்புகின்றோம். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்ற உறுதியான தீர்மானம் செய்யாமல் இருப்பதற்கான ஒரு ஏமாற்று வழியாக இதனைக் கையாளுகின்றோம். இயேசு அம்மனிதரின் உண்மையான ஆழமான விருப்பதிற்கு மாறான ஒரு கேள்வியை அவரிடத்தில் கேட்கின்றார்.
இயேசுவின் கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில், வாழ்க்கை பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்தும் வகையில் பதிலளிக்கிறார் அம்மனிதர். முதலில், தன்னை குளத்தில் இறக்கிவிட யாரும் இல்லை என்று அவர் கூறுகிறார். எனவே, தவறு அவருடையது அல்ல, ஆனால் அவரை கவனித்துக் கொள்ளாத மற்றவர்களின் தவறு என்பதாகக் கூறுகின்றார். இந்த அணுகுமுறையானது பொறுப்பேற்றலைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மாறுகிறது.
“நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் இயேசுவிடம் கூறிய வார்த்தைகளானது அம்மனிதர் தனது வாழ்வை ஒரு விவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது. நாம் அதிர்ஷ்டமற்றவர்களாக இருப்பதால், விதி நமக்கு எதிராக இருப்பதால் நமக்கு எல்லாம் மாறாக நடக்கின்றன என்று நாம் எண்ணுகின்றோம். இம்மனிதரும் அதைப்போலவே உற்சாகமிழந்தவராக, வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவராகவே தன்னை உணர்கின்றார்.
இயேசு அம்மனிதருடைய வாழ்க்கை அவரது கைகளில் இருக்கின்றது என்பதை எடுத்துரைக்கின்றார். “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்ற வார்த்தைகளின் வழியாக அம்மனிதர் எழுந்து நடக்கவும், பல ஆண்டுகளாக இருந்த அவரது சூழலை மாற்றவும், படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கவும் கட்டளையிடுகின்றார். அவரது படுக்கையானது அப்படியே அங்கேயே விட்டுவிடப் படக்கூடாது, தூக்கி எறியப்படவும் கூடாது. அது அவரின் நோயினை வாழ்க்கை வரலாறை அடையாளப்படுத்துகின்றது. அதுவரை கடந்த காலத்தினால் தடுக்கப்பட்டு, இறந்த மனிதனைப்போல அங்கேயே படுத்துகிடந்த அவர், இப்போது தனது படுக்கையை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவரது வாழ்க்கை வரலாற்றில் என்ன செய்யலாம் என்பதை அவரே தீர்மானிக்கலாம். எந்த பாதையில் நடப்பது என்பதை அவரே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, நம் வாழ்க்கை எங்கு தடுக்கப்பட்டுள்ளது, முடக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளும் கொடையை இறைவனிடம் கேட்போம். குணமடைய வேண்டும் என்ற நமது விருப்பத்திற்கு குரல் கொடுக்க முயற்சிப்போம். மேலும், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் அனைவருக்காகவும் செபிப்போம். உண்மையான இரக்கத்தின் இல்லமாகிய கிறிஸ்துவின் இதயத்தில் மீண்டும் வாழ செபிப்போம்.
இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் உலக அமைதிக்காக செபிக்க வலியுறுத்தினார். அதன்பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த மக்களுக்கு வழங்கினார் திருத்தந்தை 14ஆம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்