MAP

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – பார்வையற்றவரான பர்த்திமேயு

இறைவன் நமது கூக்குரல்களுக்கு செவிசாய்க்கவும், நம்மைக் குணப்படுத்தவும் வேண்டுமென்று நம்பிக்கையுடன் அவரிடம் கேட்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜூன் 11, புதன்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு என்ற யூபிலி ஆண்டு தொடர் மறைக்கல்வி உரையில், இயேசுவின் வாழ்க்கை என்னும் இரண்டாம் தலைப்பின் ஒன்பதாம் பகுதியாக மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் பார்வையற்ற பர்த்திமேயு பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளை திறந்த காரில் இருந்தபடி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் வளாகத்தின் மேடைப்பகுதியினை வந்தடைந்ததும் சிலுவை அடையாளத்துடன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தினைத் துவக்கினார். அதன் பின் மாற்கு நற்செய்தியில் உள்ள பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல் என்ற தலைப்பின்கீழ் உள்ள இறைவார்த்தைப் பகுதியானது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மாற்கு 10: 49 – 52

இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.  

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே,

இயேசுவின் வாழ்க்கையின் மற்றொரு முக்கியமான அடிப்படை அம்சமான அவரது குணப்படுத்துதல்களில் நாம் நமது கவனத்தை செலுத்துவோம். எனவே உங்களது வாழ்வின் மிக துயரமான அல்லது பலவீனமான நேரங்களை, உங்களை நிறுத்தி வைத்த முன்னேறிச் செல்லாமல் தடுத்து வைத்த நிகழ்வுகளை இயேசுவின் திரு இதயத்தின்முன் வைக்க அழைக்கின்றேன். இறைவன் நமது கூக்குரல்களுக்கு செவிசாய்க்கவும், நம்மைக் குணப்படுத்தவும் வேண்டும் என்று நம்பிக்கையுடன் அவரிடம் கேட்போம்.  

இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இடம்பெறும் பர்த்திமேயு நாம் தொலைந்து போனவர்களாக உணர்ந்தாலும், எதிர்நோக்கை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றார். பார்வையற்றவரும், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவருமான பர்த்திமேயுவை இயேசு எரிக்கோவில் சந்திக்கின்றார். அந்த இடம் மிக முக்கியமானது. எரிக்கோவிலிருந்து இயேசு எருசலேம் நோக்கிப் பயணிக்கையில் பர்த்திமேயுவைச் சந்திக்கின்றார். எருசலேம் நோக்கிய தனது பயணத்தைக் கடல் மட்டத்திற்குக் கீழே இருக்கும் நகரான எரிக்கோவிலிருந்து தொடங்குகின்றார் இயேசு. பாதாள நகரமான எரிக்கோவில் கீழே விழுந்த நிலையில் இருக்கின்ற, நம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்துகின்ற ஆதாமை, தனது சாவின் வழியாக மீட்க இயேசு எருசலேம் நோக்கி செல்கின்றார்.

திமேயுவின் மகனான பர்த்திமேயு என்ற வார்த்தைகள் வழியாக அவர் இன்னாரின் மகன் என்ற ஓர் உறவின் வழியாக அறிமுகப்படுத்தப்படுகின்றார். மேலும், வழியோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் என்பதன் வழியாக அவர் தனிமையில் இருந்தார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. மரியாதையின் மகன், பாராட்டுதலின் மகன் என்ற பொருள்படும் பர்த்திமேயு என்ற பெயர் கொண்ட அவர், தான் இருக்கும் சூழலினால் தன் பெயரின் பொருளுக்கு நேர்மாறாக அடையாளப்படுத்தப்படுகின்றார். யூதக் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான பெயரைக் கொண்ட பர்த்திமேயு தான் எப்படி இருக்க வேண்டும் என்று அழைக்கப்படுகிறாரோ அப்படி வாழ முடியாத நிலையில் இருக்கின்றார்.

இயேசுவின் பின்னால் நடந்து வரும் பெரிய கூட்டத்தைப் போலல்லாமல், பர்த்திமேயு அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறார். நற்செய்தியாளர் மாற்கு பர்த்திமேயு வழியோரம் அமர்ந்து இருப்பதாகவும், தான் எழுந்து நின்று தனது பயணத்தை மீண்டும் தொடங்க பிறரது உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாகவும் அவரைக் குறித்து எடுத்துரைக்கின்றார்.

வெளியேறுவதற்கு வழியே இல்லாத சூழலை நாம் சந்திக்கும்போதும், உணரும்போதும் நம்மால் என்ன செய்ய முடியும்? நமக்குள் நாம் சுமந்து செல்லும் வளங்கள் நம்மில் ஒரு பகுதி என்பதை நமக்குக் கற்பிக்கின்றார் பர்த்திமேயு. பிச்சை எடுப்பவரான அவர், எப்படி பிறரிடம் கேட்டுப்பெற வேண்டும் என்பதை நன்கு அறிந்தவராக இருக்கின்றார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் உரக்கக் கத்தி தனக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறக்கூடியவராக இருக்கின்றார். உண்மையாகவே நமக்கு ஒன்று வேண்டும் என்று நாம் விரும்பினால், அதைப் பெற்றுக்கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். மற்றவர்கள் நம்மை ஏளனத்திற்கு உட்படுத்தினாலும், நிந்தை அவமானத்திற்கு உட்படுத்தினாலும், நாம் செய்துகொண்டிருப்பதை செய்யக்கூடாது என்று கட்டாயப்படுத்தினாலும் நாம் மனம் தளராது இருக்கவேண்டும், உண்மையாகவே நாம் கேட்பதை அடைய வேண்டும் என்று விரும்பினால் தொடர்ந்து கூக்குரல் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மாற்கு நற்செய்தியில் “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று பர்த்திமேயு கத்தத் தொடங்கினார் என்று வாசிக்கக்கேட்டோம்.  இவ்வரிகள் கிழக்கத்திய மரபில் ஒரு சிறப்பு மிக்க செபமாக மாறியுள்ளது. எனவே நாமும் நமது செபமாக இதனைப் பயன்படுத்தலாம். “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, தாவீதின் மகனே பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்” என்று செபிப்போம்.

பார்வையற்றவரான பர்த்திமேயு மற்ற எல்லாரையும்விட சிறப்பான பார்வை கொண்டவராக, அதாவது இயேசுவை யார் என அடையாளம் காணக்கூடிய பார்வை பெற்றவராக இருக்கிறார். அவரது கூக்குரலைக் கேட்ட இயேசு நிற்கின்றார். அவரைத் தன்னிடம் அழைத்து வரச் சொல்கின்றார். இறைவன் செவிசாய்க்காத கூக்குரல்களே இல்லை. அவர் எல்லாருடைய கூக்குரல்களுக்கும் செவிசாய்க்கின்றார். அவரை நோக்கித்தான் நாம் கூக்குரல் எழுப்புகின்றோம் என்பதை அறியாதபோதும்கூட அவர் நம் குரல்களுக்கு செவிசாய்க்கின்றார். தன்னை நோக்கி அழைக்கும் பார்வையற்றவரை நோக்கி அவர் செல்லவில்லை. மாறாக, பார்வையற்றவரை தன்னை நோக்கி வரச் சொல்கின்றார் என்பது மிக வித்தியாசமாக நமக்கு தோன்றலாம். அமர்ந்திருந்த அவரை எழுந்து தன்னிடம் வரவழைப்பதன் வழியாக அவரது வாழ்க்கையை மீண்டும் எழச் செய்வதற்கான, செயல்படுத்துவதற்கான ஒரு வழியை உருவாக்குகின்றார் இயேசு. அம்மனிதன் தனது சொந்த காலில் மீண்டும் எழுந்து நிற்க முடியும், தனது இறப்பின் சூழலிலிருந்து மீண்டு எழ முடியும் என்பதை உணர்த்துகின்றார் இயேசு. இதனை வெளிப்படுத்தும் விதமாக பர்த்திமேயுவும் தனது மேலுடையை எறிந்து விட்டு இயேசுவைப் பின்தொடர்வதன் வாயிலாக அதனை அடையாளப்படுத்துகின்றார்.

பிச்சை எடுப்பவருக்கு மேலாடை என்பது எல்லாமாக பயன்படுகின்றது. பாதுகாப்பாக, தங்கும் இல்லமாக, ஆபத்துக்களிலிருந்து காக்கும் ஒன்றாக மேலாடை பயன்படுகின்றது. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. (வி.ப.:22:25) என்று விடுதலைப்பயணம் நமக்கு வலியுறுத்துகின்றது., பல நேரங்களில், நம்மைப் பாதுகாப்பதற்காகவும், தற்காத்துக்கொள்ளவும் நாம் வெளிப்படையாக பயன்படுத்தும் மேலாடைகள் போன்றவைகளே நம்மை முன்னேறிச்செல்லாமல் தடுக்கின்றன. இயேசுவிடம் சென்று நம்மைக் குணப்படுத்திக் கொள்ள நம்மை நாம் அனுமதிக்கவேண்டும். பர்த்திமேயு இயேசுவின் முன் தனது பலவீனம் அனைத்தோடும் நிற்கின்றார். இதுவே நாம் குணம்பெறுவதற்கான அடிப்படையாகும்.

இயேசு அவரிடம் கேட்கும் கேள்வி கூட வித்தியாசமாகத் தெரிகிறது: “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்கின்றார். ஆனால், உண்மையில், நாம் நமது நோய்களிலிருந்து குணமடைய விரும்புவதைவிட, எதற்கும் பொறுப்பேற்காமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறோம். இயேசுவின் கேள்விக்கு பர்த்திமேயுவின் பதில் ஆழமானது: அவர் (anablepein) அனபிளேபெய்ன் என்ற வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார், இதற்கு "மீண்டும் பார்ப்பது" என்று பொருள். ஆனால் இதை "ஒருவரின் பார்வையை உயர்த்துவது" என்றும் மொழிபெயர்க்கலாம். உண்மையில், பர்த்திமேயு மீண்டும் பார்க்க விரும்புவது மட்டுமல்லாமல், தனது மாண்பை மீண்டும் பெறவும் விரும்புகிறார்! உயரே நாம் பார்க்கவேண்டுமெனில், நாம் நமது தலையை உயர்த்த வேண்டும்.

பர்த்திமேயுவையும், நம் ஒவ்வொருவரையும் காப்பாற்றுவது நம்பிக்கை. நாம் விடுதலை பெற இயேசு நம்மை குணப்படுத்துகிறார். அவர் பர்த்திமேயுவை தன்னைப் பின்தொடர அழைக்கவில்லை, மாறாக “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்று கூறி அவரை மீண்டும் தனது வழியில் பயணிக்கச் சொல்கிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளர், “பர்த்திமேயு மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.  இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினார்” என்று கூறி இந்நிகழ்வை நிறைவு செய்கின்றார். பர்த்திமேயு சுதந்திரமான மனநிலையில் இயேசுவைப் பின்தொடர்வதைத் தேர்வுசெய்கின்றார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது நோய்களையும், நமது அன்புக்குரியவர்களின் நோய்களையும் இயேசுவின் முன் நம்பிக்கையுடன் கொண்டு வருவோம். தொலைந்து போனவர்களாகவும், வெளியேற வழியின்றி இருப்பவர்களாகவும் வாழும் மக்களின் துயரத்தையும் அவரிடம் கொண்டு வருவோம். அவர்களுக்காகவும் நாம் கூக்குரல் எழுப்புவோம், கடவுள் நம் கூக்குரலைக் கேட்டு நமக்காக நிற்பார், நமது கூக்குரலுக்கு அவர் செவிசாய்ப்பார் என்று உறுதியாக நம்புவோம்.

இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தினார். ஆங்கில மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் வருகின்ற ஞாயிறு ஜூன் 15 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் தூய தமத்திரித்துவப் பெருவிழாவை நினைவுகூர்ந்து, நம் இதயங்களை தந்தை மகன் தூய ஆவியாரை வரவேற்கும் இடமாக மாற்ற அழைப்புவிடுத்தார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்தியபின், உலக அமைதிக்கான தனது விண்ணப்பங்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபிக்க கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 ஜூன் 2025, 10:00

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >