MAP

உலக மீட்பர் மற்றும் புனித சார்லஸ் மறைபரப்பு துறவு சபையினருடன் திருத்தந்தை உலக மீட்பர் மற்றும் புனித சார்லஸ் மறைபரப்பு துறவு சபையினருடன் திருத்தந்தை   (ANSA)

இயேசுவின் பணி எப்போதும் நமக்கு முன்பாக செல்கிறது!

"புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், புனித யோவான் பத்திஸ்தா ஸ்கலாப்ரினி ஆகிய இரு நிறுவுநர்களும் தங்கள் காலத்தின் சமூகப் பிரச்சனைகளுக்கு இரக்கத்துடன் பதிலளித்த ஆயர்கள் ஆவர்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"நமது உலகிலும் இயேசுவின் பணி எப்போதும் நமக்கு முன்பாகச் செல்கிறது என்றும், ஞானம் நிறைந்த தேர்ந்துதெளித்தல் வழியாக நமது மனதையும் இதயத்தையும் அதற்கு இணங்கச் செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்" என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஜூன் 26, வியாழக்கிழமை, உலக மீட்பர் மற்றும் புனித சார்லஸ் மறைபரப்புத் துறவு சபைகளின் (Scalabrinian) ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, “திருஅவை உங்களின் அர்ப்பணம் நிறைந்த பணிகளுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறது” என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, குறைந்து வரும் இறையழைத்தல்களுக்கு மத்தியில், இச்சபைகளின் உறுப்பினர்களை ஆயர்களாகப் பணியாற்ற வழங்குவதில் அவர்கள் கொண்டுள்ள திறந்த மனப்பான்மைக்காக அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாகவும், இது ஒரு தாராளமான செயல் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, இது ஒரு தியாகம் நிறைந்த செயலாக இருந்தாலும், இது ஒரு ஆழமான கொடையாகவும், திருஅவை மற்றும் துறவறக் குழுமங்கள் இரண்டையும் வளப்படுத்துவதாகவும் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.

புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார் அவர்களால் தொடங்கப்பட்ட உலக மீட்பர் துறவு சபையினர், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என்றும், புனித யோவான் பத்திஸ்தா ஸ்கலாப்ரினியைப் பின்பற்றும் புனித சார்லஸ் மறைபரப்புத் துறவு சபையினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பணியாற்றுவதில் உறுதியாக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இரு நிறுவுநர்களும் தங்கள் காலத்தின் சமூகப் பிரச்சனைகளுக்கு இரக்கத்துடன் பதிலளித்த ஆயர்கள் என்றும், மேலும் நவீன சவால்களுக்கு மத்தியில் தற்போதைய ஆயர்களும் அவர்களைப் போன்றே செயல்பட வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

அவர்களின் இந்தப் பணியை நிகழ்ந்து கொண்டிருக்கும் எதிர்நோக்கின் யூபிலி ஆண்டுடன் இணைத்து, தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் தேர்ந்துதெளிதலைப் பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் மந்தையாம் அவர்தம் மக்களுக்குப் பணியாற்றுவதற்கான தொடர்ச்சியான உடன்பிறந்த உறவுகொண்ட உரையாடல், ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவித்து, அவர்களுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி இந்த உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 ஜூன் 2025, 14:26