சிறாருக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் புனிதத்திற்கு எதிரானவை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
குழந்தைகளைப் பாலியல் முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பது என்பது ஒருபோதும் கொள்கைகளின் ஒரு தொகுப்பாகக் குறைக்க முடியாது மாறாக, அது நீதிக்கான ஒரு பணியாகவும், அன்பில் வேரூன்றிய ஒரு கடமையாகவும் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூன் 5, வியாழனன்று, பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாகும் சிறார்களைப் பாதுகாக்கும் பாப்பிறை அமைப்பின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் 22 பேரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, தாராள மனதுடன் இத்தகைய உன்னதமான பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டமைக்காக அவர்களைப் பாராட்டினார்.
பாலியல் முறைகேடுகள் அருவருப்பானவை
குழந்தைகளைப் பாலியல் முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பது என்பது நற்செய்தியின் கனியாக, அது திருஅவை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் அதாவது, நமது பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், துறவறக் குழுமங்கள் மற்றும் திருப்பீடத்தையும் கூட வடிவமைக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
சிறாருக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் திருஅவையின் புனிதத்திற்குள் நுழையும்போதெல்லாம் அது அதன் மையத்திலேயே அதன் பணியை மீறுகிறது என்றும், பாலியல் முறைகேடுகள் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வலுகுறைந்தவர்களுக்கு எதிரானது என்றும், இது ஒரு கடுமையான குற்றம் மற்றும் பாவம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுளின் திருஅவையில், இது ஒரு அருவருப்பானது, ஏனெனில் இது தஞ்சமடையும் கடவுளின் புனித இடத்தை அச்சமும் ஆபத்தும் நிறைந்ததொரு இடமாக மாற்றுகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
திருஅவையின் நடவடிக்கைகள்
இந்த ஆண்டுகளில், பாலியல் முறைகேடுகள் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திருஅவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உங்கள் ஆணையத்தை நிறுவுதல் என்பதில், ஆயர்களின் பாலியல் முறைகேடுகள் மற்றும் தவறான நடத்தையைப் புகாரளிப்பதற்கான வழிமுறைகளை வழங்கும் திருஅவைச் சட்டம் மற்றும் பிற வழிமுறைகளைப் புதுப்பித்தல், சில அதிகார வரம்புகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்குக் கட்டாயமாகப் புகாரளிக்கும் கடமை மற்றும் வளர்ந்து வரும் தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை அடங்கும் என்றும் எடுத்துரைத்தார்.
அதேவேளையில், கொள்கைகளால் மட்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது என்றும், சட்டங்கள் மட்டும் குணப்படுத்துதலைக் கொண்டுவருவதில்லை என்றும் மொழிந்த திருத்தந்தை, சந்தேகம் மற்றும் மௌனத்தை அல்ல, மாறாக, பாதுகாப்பு மற்றும் குணப்படுத்துதலின் சூழலை நாம் உருவாக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள முடியாத குற்றங்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், உண்மையான மாற்றத்திற்கு கலாச்சாரம், துணிவு மற்றும் மனமாற்றம் தேவை என்றும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரின் குரல்களைக் கேட்போம்
இந்தக் காரணத்திற்காக, ஒவ்வொரு நிலையிலும் திருஅவை, அதன் தோற்றத்திற்காகவோ அல்லது நெறிமுறைக்காகவோ அல்லாமல், அவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும், நமது செயல்களை வடிவமைக்கவும் உதவும் ஒரு நேர்மையான உரையாடலில், பாலியல் முறைகேடுகளுக்கு ஆளானவர்களில் எஞ்சியோரின் குரல்களைக் கேட்பதை உள்ளடக்கிய ஒரு நடைமுறைக்கு உறுதியாக உறுதியளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.
நம்முன் உள்ள பணி மக்கள் தொடர்புகள் அல்ல, மாறாக ஒரு தீவிரமான பொது அர்ப்பணிப்பு என்பதில் மிகவும் தெளிவாக இருப்போம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, காயங்களைக் கட்டுவதற்கும், நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், ஆன்மிக வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் அருளால் குணமடைந்த, புதுப்பிக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட வாழ்க்கையின் நற்செய்தி வாக்குறுதியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ஒன்றாகச் செயல்படுவது ஒரு முக்கியமான விடயம் என்றும் விவரித்தார்.
திருத்தப்பட்ட அறிக்கை
கத்தோலிக்கத் திருஅவையில் பாலியல் முறைகேடுகளுக்கு ஆளாகும் சிறார்களின் பாதுகாப்பிற்கான திருஅவைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தின் அறிக்கையைத் தமக்காகத் தயாரிக்குமாறு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வமைப்பிடம் கேட்டுக்கொண்டார் என்றும், இவ்வறிக்கை கடந்த ஆண்டு முதல் முறையாகத் திருத்தப்பட்டது என்றும் அவர்களுக்கு விளக்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மேலும் திருத்தப்பட்ட இவ்வறிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான திருஅவையின் உறுதிப்பாட்டின் உறுதியான அடையாளமாகும் என்றும், கடந்த கால தோல்விகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும், இன்னும் தேவைப்படும் மாற்றங்கள் பற்றிய அறிகுறியும் இதில் அடங்கும் என்றும் மொழிந்த திருத்தந்தை, இந்த ஆண்டு இந்த அறிக்கையைப் பெற தான் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.
உலகளாவியத் திருஅவைக்குப் பணியாற்றுவதில் இந்தப் பாப்பிறை அமைப்பிற்கும் திருப்பீடத் துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தான் பாராட்டுவதாக உரைத்த திருத்தந்தை, நிகழ்நிலை (online) பாலியல் முறைகேடுகளின் புதிய சவால்கள், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவால் எழுப்பப்படும் சவால்கள் குறித்த இவ்வமைப்பின் குறிப்பிட்ட நோக்கத்தையும் தான் கவனத்தில் கொள்வதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்